Show all

நீட் -அடுத்த சோகவிபத்துத் தாக்குதலை முன்னெடுத்திருக்கிறது தமிழகத்தின்மீது! உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் மாணவி ஜோதிசிறிதுர்கா

நாளை நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த மதுரை தல்லாகுளம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மாணவி ஜோதிசிறி துர்கா, நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரியலூர் மாணவர் விக்னேஷ் தந்த நீட் சோகம் மாறுவதற்கு முன்பே இன்னொரு சோகக் கதைக்கு காரணமாகியிருக்கிறது ஒன்றிய அடாவடி பாஜக அரசு.

நாளை நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த மதுரை தல்லாகுளம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மாணவி ஜோதிசிறி துர்கா, நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

என் துயர முடிவுக்கு ஒன்றிய அரசின் நீட் தேர்வே காரணம் என கடிதம் எழுதி வைத்திருப்பதுடன், மரண வாக்குமூலமாக குரல் பதிவு செய்து விட்டுச் சென்றுள்ளார் ஜோதிசிறி துர்கா.

அரியலூர் மாணவி அனிதா தொடங்கி, ஜோதிசிறி துர்கா வரையிலும் 15-க்கும் மேற்பட்ட அறிவுக் கூர்மையுள்ள, பல்திறன் ஆற்றலுள்ள வளர்பருவக் குழந்தைகளை தமிழகம் பலி கொடுத்து வருவதை தடுக்க இயலாதா? வெறுமனே கை பிசைந்து நின்று பாதிக்கப் படுகிறவர்கள் மட்டுமே அவ்வப்போது கண்ணீர் வடிப்பது தீர்வாகுமா? நமக்கான அரசு என்றுதானே- அன்னை செயலலிதா நாற்பதும் நமதே என்று கேட்டபோது தயங்காமல் தமிழக மக்கள் வாக்களித்து இருந்தோம். என்று பெற்றோர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

நீட் தேர்வில் விலக்குப் பெறுவதாக உறுதியளித்து வந்த மாநில அரசும், பிடிவாதமாக நீட் தேர்வை திணித்து வரும் ஒன்றிய பாஜக அரசும் தாம், இந்தத் தொடர் மரணங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறது.

இளைய தலைமுறையை அழித்தொழித்து வரும் நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தவும், நீட் தேர்வை தவிர்த்து, பழைய முறைப்படி . பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மாணவி ஜோதிசிறி துர்காவின் நினைவுகளுக்கும், அவரைப் பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் இரங்கல் தெரிவிப்பதாக இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.

தமிழகப் பிள்ளைகள் ஆறாம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கும் போதே தாங்கள் என்னவாக வேண்டும் என்று கனவு காணத் தொடங்கி விடுகின்றனர். கனவு காணுங்கள் இளைஞர்களே என்று அப்துல் கலாம் சொன்னபோது பேரங்கீகாரமாக கருதினார்கள். வெறித்தனமாக படித்து பனிரெண்டாம் வகுப்பில் அருமையான மதிப்பெண் பெற்றுவிட்டு, மருத்துவக் கல்விக்கோயிலுக்குள் நுழைய முற்படும் போது- நாம் மணியடிக்க நியமித்த பூசாரிபோல் கோயிலுக்குள் நுழைய நீட்டை நிர்பந்திக்க ஒன்றிய பாஜக அரசுக்கு என்ன உரிமை இருக்க முடியும்? புரியவில்லை இந்த மண்ணில் முன்னெடுக்கப்படும் இந்த அநியாயத்திற்கான காரணம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.