Show all

நள்ளிரவே விற்றுத் தீர்ந்தன பி.எஸ்.3 தரநிலையில் தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்

பெருகி வரும் வாகன மாசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாசு தரம் பி.எஸ்.4 நெறிமுறைகளை பின்பற்றி வாகனங்கள் தயாரிக்குமாறு வாகன தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து பழைய தரத்தில் அதாவது பி.எஸ்.3 மற்றும் 2-ன் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுக்கு 1-ந்தேதி (நாளை) முதல் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

     ஆனால் பி.எஸ்.3 தரநிலையில் தயாரிக்கப்பட்ட 6.71 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் தற்போதும் மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களிடம் இருப்பில் உள்ளது. உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவால் இந்த இருசக்கர வாகனங்களின் விற்பனை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

     அதன்படி ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது ஸ்கூட்டர்களுக்கு ரூ.12,500-ம், பிரீமியம் பைக்குகளுக்கு ரூ.7500-ம், புதிய மாடல் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரமும் தள்ளுபடி அறிவித்து உள்ளது.

     இதைப்போல ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், அனைத்து விதமான பி.எஸ்.3 தரநிலை இருசக்கர வாகனங்;களுக்கும் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்து உள்ளது.

     இந்த சலுகைகள் அனைத்தும் இருப்பு உள்ளவரை அல்லது இன்று வரை மட்டுமே அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

     இந்த நிலையில் இருசக்கர வாகன ஆர்வலர்கள் நேற்று மாலையே இந்த நிறுவனங்களை நோக்கி படையெடுத்ததால் நள்ளிரவே அனைத்து வாகனங்களும் விற்றுத் தீர்ந்தன.

     இன்று இந்த நிறுவனங்களின் தள்ளுபடி விளம்பரங்கள் செய்தித்தாள்களில் வந்த நிலையில் இன்று நிறுவனங்களை அணுகிய அனைவரும் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.