இராதாகிருட்டிணன்நகர்
தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் போலி ஆவணங்கள் மூலம்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு பெற்றதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்
புகார் அளிக்கப்பட்டுள்ளது. செயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து இராதாகிருட்டிணன்நகர்
தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 62 வேட்பாளர்கள் களத்தில்
உள்ளனர். திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷ், அதிமுக
அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில்
போட்டியிடும் மதுசூதனன், தேமுதிக சார்பில் மதிவாணன், செயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர்
முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்த தேர்தல் ஆளும் அதிமுகவுக்கு, மிக தலையாய
தேர்தலாக கருதப்படுகிறது. இந்தநிலையில், இராதாகிருட்டிணன்நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம்
அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன், போலி ஆவணங்கள் மூலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்
குடியிருப்பில் வீடு பெற்றதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வடசென்னை இளைஞரணி முன்னாள் செயலாளர் பழனி என்பவர் அளித்துள்ள அந்தப் புகாரில்
கடந்த 1995-ஆம் ஆண்டில் மாநில கைத்தறித்துறை அமைச்சராக இருந்த போது மதுசூதனன், கோடம்பாக்கத்தில்
உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், தமது மனைவி பேரில் போலி ஆவணங்கள்
தயாரித்து வீடு பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவின் போது விஜயலட்சுமி
என்ற பெண்ணுக்கு பதில் மதுசூதனின் மனைவி ஜீவாவே கைரேகை வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயலட்சுமி என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்காளர் அட்டையின் எண்ணும், மதுசூதனனின்
மனைவி ஜீவாவின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருப்பதாகவும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சொத்தையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளதால், மதுசூதனின் வேட்பு மனுவை நிராகரிக்க
வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



