Show all

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகாதா மோடியின் அறிவிப்பு! செயற்கைக்கோள் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றியாம்

மிசன் சக்தி என்ற செயற்கைக்கோள் அழிக்கும் ஏவுகணை சோதனை, வெற்றி பெற்றதாக மோடி பெருமிதப் பட்டுக் கொள்ளும் அறிவிப்பு: தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ள தற்போதைய சூழலில், தேர்தல் நடத்தை விதியை மீறியதாகதா என்ற கேள்வி தீயாகத் தொடங்கியுள்ளது இணையத்தில்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காலையிலேயே கீச்சுப் பதிவிட்டு, இன்றைக்கு மிக முதன்மையான செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவிக்க இருப்பதாக பரபரப்பு கிளப்பியிருந்தார் மோடி.

இந்த நிலையில், விண்ணில் செயற்கைகோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக தலைமைஅமைச்சர் மோடி அறிவித்து பெருமிதமடைந்தார்.

தொலைக்காட்சி மூலம், நாட்டு மக்களுக்கு தலைமைஅமைச்சர் மோடி ஆற்றிய உரை: இது நாடு பெருமைப்பட வேண்டிய நேரம். இந்தியா தற்போது விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இந்தியா புதிய சாதனை புரிந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட சோதனையை இந்தியாதான் செய்துள்ளது.

செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனையில் இந்தியா சாதனை படைத்துள்ளது. 'மிசன் சக்தி' என பெயரிடப்பட்ட இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது. 380 கி.மீ. உயரத்தில் இருந்த செயற்கைகோளை ஏசாட் ஏவுகணை மூலம் மூன்று நிமிடங்களில் சுட்டு வீழ்த்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்குப் பிறகும், விண்வெளி மூலம் போர் தொடுக்கப்படக் கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. இந்தியா, எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகத்தான் இருந்துள்ளது. அதே நேரத்தில் நம்மை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம். இது இந்தியாவின் செயற்கைகோள்களை பாதுகாக்க தானே தவிர, மற்ற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல.

மிசன் சக்தி திட்டம் மூலம் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி. நாம் எல்லோரும் இது குறித்து பெருமைப்பட வேண்டும். தரை வழியாக, நீர் வழியாக மற்றும் வான் வழியாக மட்டுமல்ல, இனி நாம் விண்வெளி வழியாகவும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்தச் சாதனையைச் செய்வதற்கு உறுதுணையாய் இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி. இந்தியா, இந்த சோதனையின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது. இன்றைய சோதனை வரும் தலைமுறைகளிலும் பிரதிபலிக்கும். 

மிசன் சக்தி, முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை கொண்டு செய்யப்பட்டுள்ளது. விண்வெளி போட்டியில், ஆயுதங்கள் கூடாது என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. இந்த முயற்சி சர்வதேச விதிகளை மீறவில்லை. இவ்வாறு தலைமைஅமைச்சர் மோடி பேசினார்.

ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டீர்களே மோடி என்ற கருத்து இணையத்தில் தீயாகத்; தொடங்கியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.