பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், ஒன்பது வகையான வீரிய மருந்துகளால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி ஆற்றின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா ஆகும். 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களுக்கும் ஆரியர்கள் கதைகள் கட்டியிருப்பார்கள். தமிழர் விழாக்களை நடைமுறையில் கொண்டாடும் அடிப்படையில்தான் எவை முழுக்க முழுக்க தமிழர் விழாக்கள் என்பதை நிறுவ முடியும். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், ஒன்பது வகையான வீரிய மருந்துகளால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி ஆற்றின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பழனியில் உள்ள முருகனுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடிக்கு வந்து காவிரிஆற்று நீரை தீர்த்தமாக எடுத்து சென்று நீர்முழுக்கு செய்வது வழக்கம். இந்தியாவின் பல பகுதிகளில் மதங்களின் பெயரால் மனிதர்கள் மோதிக் கொண்டாலும், மதங்களைக் கடந்து மனிதநேயமே முதன்மை என்று கொண்டாடுவதே தமிழக நிலைபாடு ஆகும். இயற்கைச் சீற்றம், பேரிடர்களின்போது தமிழர்களின் இந்த மனிதநேயம் மிகமிக தூக்கலாக இருப்பதைக் கண்டு உலகமே வியப்பது உண்டு. அதே திருவிழாக்களின்போதும் மதமாச்சர்யங்களை மறந்து, எல்லாருமே விழாவைக் கொண்டாடி மகிழ்வதும் உண்டு. தமிழகத்தின் பல இடங்களில், மத அடையாளம் கடந்து, மனிதம் என்ற உன்னத உணர்வுடன் மதப்பாகுபாடு இல்லாமல் இன்றளவும் உறவு கொண்டாடி மகிழ்வதைக் கண்கூடாக காணலாம். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் என்ற கிராமத்தில், தமிழர் திருவிழாவான பங்குனி உத்திரத் திருவிழாவை, முகமதிய மக்களும் கொண்டாடி, ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர். ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையத்தில், சிறப்பு மிக்க முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக மஞ்சள் நீராடல் நடைபெறும். இதில் முகமதியர்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன், மக்கள் நோயின்றி நலமுடன் வாழ வீடுகளில் சந்தனம் பூசுவர். மேலும், இனிப்பு, பழ வகைகளையும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த ஆண்டும் விழா, வழக்கம் போல சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான முகமதிய சமூக மக்கள் கலந்துகொண்டனர். முகமதிய நண்பர்கள் கூறியதாவது: குருசாமிபாளையத்தில் உள்ள முருகன் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு, எங்களை அழைப்பர். நாங்களும் கலந்து கொள்வோம். வெறுமனே வாய் வார்த்தையாக அழைப்பதில்லை. விழாவுக்கு, ஒரு மாதத்துக்கு முன் பழத் தட்டு, சீர்வரிசையுடன் ராசிபுரத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு, குருசாமிபாளையம் கிராம பெரியதனக்காரர்கள் வந்து, விழாவில் பங்கேற்குமாறு எங்களை அழைப்பர். அவர்களின் அழைப்பை ஏற்று, விழாவின் கடைசி நாளான மஞ்சள் நீராட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்வோம். அப்போது கோயிலுக்கு உள்ளே நாங்கள் செல்வோம். மேலும், மேள, தாளம் முழங்க, கோயிலில் இருந்து வெள்ளைக்கொடி ஏந்தியபடி கிராமம் முழுவதும் சென்று, ஒவ்வொரு வீட்டின் முன்பும் மக்களுக்கும் சந்தனம் பூசுவோம். நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட, இதை மேற்கொள்கிறோம். பின், கிராமத்தில் உள்ள பாவடி திடலில், கோயில் மரத்தின் கீழ் அமர்ந்து முகமதியர்களும், தமிழர்களும் ஒருவருக்கொருவர் சந்தனம் பூசி மகிழ்வோம். பழம், தட்டு சீர்வரிசை மற்றும் பொட்டுக்கடலை, நாட்டுச் சர்க்கரை கலந்த இனிப்பை தமிழர்களுக்கு வழங்குவோம். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் விருந்து வழங்குவர். இந்த நிகழ்வுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவுபெறும். இதுபோல, ரம்ஜான் திருவிழாவின்போது நாங்களும், குருசாமிபாளையத்தைச் சேர்ந்த மக்களை அழைப்போம். அவர்களும் விழாவின் ஏதாவது ஒரு நாளில் கலந்துகொண்டு, நோன்பு கஞ்சி சாப்பிடுவர். ஏறத்தாழ 150 ஆண்டுகளாக இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மதங்களைக் கடந்து மனிதத்தைப் போற்றும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது என்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.