Show all

மோடி மற்றவர்களின் குளியலறை குறித்துப் பேசுவதை நிறுத்த வேண்டும்: சிவசேனை

மற்றவர்களின் குளியலறை குறித்துப் பேசுவதை நிறுத்திவிட்டு, அரசு நிர்வாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டுமென்று சிவசேனை வலியுறுத்தியுள்ளது.

     ‘குளியலறையில் மழை கோட் அணிந்து குளிப்பது எப்படி என்பதை அறிந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்’ என்று மோடி அண்மையில் பேசியிருந்தார். மேலும், உத்தரப் பிரதேச தேர்தல் கருத்துப்பரப்புதலில் பல்வேறு எதிர்க்கட்சிகளையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

     இந்நிலையில், சிவசேனை கட்சியின் பத்திரிகையான சாம்னாவில், இது குறித்து எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் ஜாதகம் தன்னிடம் இருப்பதாகக் கூறினார். இதற்கு பதிலளித்த அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், ‘இணையதளத்தில் ஜாதக விவரங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன’ என்று பதிலளித்தார். தேர்தல் கருத்துப்பரப்புதல் என்பது எந்த அளவுக்கு தரம் குறைந்து வருகிறது என்பதற்கு இது உதாரணமாகும்.

நீங்கள் (மோடி) ஆட்சியில் இருப்பதால் எதிர்க்கட்சியினர் ஜாதகம் உங்களிடம் இருக்கிறது. ஆனால், அதனை வெளிப்படுத்துவதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும், நீங்கள் ஆட்சியில் இருந்து வெளியேறிய பிறகு, உங்கள் ஜாதகம் அடுத்து ஆட்சிக்கு வருபவர்களிடம் இருக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

     குறைந்தபட்சம் பிரதமர் மோடியாவது இப்போது வகித்து வரும் பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் குளியலறை விசயங்களைப் பேசுவதை நிறுத்திவிட்டு அரசு நிர்வாகத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

     அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்ட பதவி வகிப்பவர்கள் அரசு இயந்திரத்தை எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகப் பயன்படுத்துவது அரசியல் ஊழலாகும். ஆனால், இதுபோன்ற செயல்கள் இப்போது வெளிப்படையாக நடைபெறுகின்றன.

என்று சாம்னா தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.