Show all

தலைமைஅமைச்சர் மோடி எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்!

தலைமைஅமைச்சர் மோடி எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் உரையில், இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக இருபத்தியோரு நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சட்டப்பேரவையில் நலங்குத்துறை மானியக் கோரியக்கையின் மீது ஆற்றிய உரை மிகவும் உருக்கமாக இருந்தது. அவருடை பேச்சில் உச்ச பட்சமான செய்தி: 

தலைமைச் செயலகத்திலிருந்து நான் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறேன். 60 கோடி ரூபாயோ, 500 கோடி ரூபாயோ, இன்னும் எத்தனை கோடி தேவையோ அதையனைத்தையும் செய்து கொடுப்பதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார். பொதுமக்களிடமிருந்து நாங்கள் ஒத்துழைப்பை மட்டும்தானே கேட்கிறோம். ஒத்துழைப்புக் கொடுங்கள், வீட்டிலேயே இருங்கள், கவனமாக இருங்கள், வெளியே வராதீர்கள் என்று நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகமக்களுக்கு அன்பான உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த ஆறுதல் செய்தியைக் கொரோனா வந்தவன் கேட்டால் கூட அழுதே விடுவான். வாழ்த்துக்கள் நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களே. 

இன்று இரவு எட்டு மணிக்கு இந்தியத் தலைமைஅமைச்சர் மக்கள் முன் உரையாற்றுவார் என்ற செய்தி கேட்டதிலிருந்தே பலருக்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. தமிழக அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய்க்கு கூட ஏதாவது வேட்டு வைத்துவிடுவாரோ என்று சிலர் பேசிக் கொண்டார்கள். கொரோனா பீதியை விட பெரிய பீதியாயிற்றே என்று புலனத்தில் சிலர் பதிவிட சிலர் பகிரவும் செய்தார்கள். ஏனென்றால் மோடியின் அந்த இரவு எட்டுமணி பேச்சுகளால் நாம் கற்ற அனுபவம் அப்படி. 

பணமதிப்பிழப்பு என்று அறிவித்து- அன்று நள்ளிரவிலிருந்தே பாமர மக்களை அலையோ அலையென்று அலைய விட்டார்கள். வங்கி காத்திருப்பில் பல மரணங்கள் கூட நடந்தன.

அடுத்த ஒரு எட்டு மணியில்தான- மாநில வரிவாங்கும் உரிமை பிடுங்கப்பட்டு சரக்குசேவை வரியாக பேய்வேடம் கொண்டு தொழில் வணிகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தொழில் வணிகத்தில் ஐந்து விழுக்காடு இலாபம் பார்த்துக் கொண்டிருந்த சிறு குறு முதலாளிகளிடம் 18விழுக்காடு வரி வசூலித்து வாங்கிக் கொண்டிருக்கிறது நடுவண் பாஜக அரசு.

நல்லவேளை இந்த எட்டு மணியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு கொரோனா சார்ந்த தவிர்க்க முடியாத நடவடிக்கையாகப் போய்விட்டது. அந்த அறிவிப்பில், இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக இருபத்தியோரு நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், “தலைமைச் செயலகத்திலிருந்து நான் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறேன். 60 கோடி ரூபாயோ, 500 கோடி ரூபாயோ, இன்னும் எத்தனை கோடி தேவையோ அதையனைத்தையும் செய்து கொடுப்பதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார்” என்ற  நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் போல மோடியின் பேச்சில் எதுவும் இடம்பெறவில்லை.

ஆனால் இப்படி பேசியிருக்கிறார். “இந்தியாவின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடைந்தாலும் பரவாயில்லை, எனக்கு மக்களின் உயிர்தான் முக்கியம் என்று தலைமைஅமைச்சர் மோடி பேசி இருக்கிறார்”

‘அறுத்த கைக்கு சுண்ணாம்பு தராதவன்’ என்று தமிழில் ஒரு அழகான சொலவடை உண்டு அதற்கு பொறுத்தமானவர்கள்தாம் இந்த நடுவண் பாஜக ஆட்சியாளர்கள். 

நான் சிறு அகவையாக இருக்கும் போது ஒரு முறை பாம்பாட்டி நடத்தும் பம்மாத்து நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு கிடைத்தது. பாம்பாட்டி சில கூடைகளில் சில பாம்புகளை அடைத்து வைத்துக் கொண்டு மகுடியை வாசித்து ஆட விட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு கோலை தரையில் ஊன்றி வைத்து, அதில் ஒரு நீண்ட கயிற்றில் ஒரு கீரியையும் கட்டி வைத்திருந்தார். 

பார்வையாளர்களை வட்டமாக அமர வைத்திருந்தார். நான் இப்போது கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடும் காட்சியை உங்களுக்குக் காட்டப் போகிறேன். நிகழ்ச்சி முடியும் வரை யாரும் எழுந்து போக கூடாது மீறிப்போனால் இரத்தம் கக்கி செத்தால் நான் பொறுப்பல்ல என்று சொல்லி பார்வையாளர்கள் யாரையும் போகவிடாமல் மிரட்டி வைத்திருந்தார். 

அடுத்து கூட்டத்தில் யாராவது துணிச்சல் உள்ளவர்கள் இருந்தால் வாங்க. இந்த முட்டையைப் பாம்புக்கு உடைச்சு ஊத்துங்க. பாம்பு முட்டையைக் குடித்ததும் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடுவேன் என்று அழைப்பு விடுத்தார். கூட்டத்தில் இருந்து ஒரு பையன் எழுந்து வந்தான். அந்தப்பையன் அவர் வைத்து ஆள் போல இருக்கிறது. அவனிடம் நிறைய பகடியாடினார். 

அந்த சிறுவனிடம் ஒரு முட்டையைக் கொடுத்து, ஒரு சிறு கருப்பு பையையும் கொடுத்தார். இந்த முட்டையை இந்தப் பையில்போட்டு பத்திரமாக பிடித்துக் கொள் என்றார். அந்தப்பையனும் முட்டையை சிறுகருப்புப் பையில்முட்டையைப் போட்டு பிடித்துக்கொண்டான். 

கீழே வைத்திருந்த தட்டு ஒன்றைக்காட்டி, நான் மகுடி வாசிக்கத் தொடங்கியதும், இந்தத் தட்டில் முட்டையை உடைத்து ஊற்று என்று சொல்லிவிட்டு மகுடி வாசிக்கத் தொடங்கிவிட்டார். 

அந்தப்பையன் அந்தப் பையில் முட்டையை எடுக்க முயன்ற போது முட்டையைக் காணோம். பையை தலைகீழாக கவிழ்த்து எல்லாம் நம்மிடம் காட்டி, ஏய்! பாம்பாட்டி முட்டை காணோம். என்று உரக்க கத்திப் பேசினான். 

பாம்பாட்டி செவி மடுக்காமலே கொஞ்ச நேரம் வாசித்து கொண்டிருந்து விட்டு, பிறகு என்ன பையா? முட்டை ஒடைச்சி பாம்புக்கு ஊத்தீட்டியா என்று உரக்க கேட்கிறார் பாம்பாட்டி. ஏய் என்னய்ய பண்ணுன நீ முட்டையை காணமய்யா என்று உரக்கப் பேசி நடிக்கிறான் சிறுவன். 

சரி நான் சொல்றத அப்படியே சொல்லு என்கிறான் பாம்பாட்டி. சரி என்பது போல தலையாட்டுகிறான் சிறுவன். 
முட்டை போனா, போயிட்டு போவுது என்ற உரக்க கத்துகிறான் பாம்பாட்டி.
சிறுவனும் முட்டை போன போயிட்டு போவுது என்று உரக்க கத்துகிறான்.
பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள். பார்வையாளர்கள் சிரிப்பு அடங்கியதும். பார்வையாளர்களைப் பார்த்து-
ஆமா என்னோடமுட்டை போனா இந்தச் சிறுவனுக்கு என்ன என்கிறார் பாம்பாட்டி.

அந்த பாம்பாட்டி பம்மாத்து நிகழ்ச்சி, மோடியின் பேச்சைக் கேட்ட இந்தத் தருணத்தில் எனது மனதில் ஓடி எனக்குள் சிரிப்பை உண்டாக்கியது. 

“இந்தியாவின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடைந்தாலும் பரவாயில்லை, எனக்கு மக்களின் உயிர்தான் முக்கியம்” என்று தலைமைஅமைச்சர் மோடி பேசி இருக்கிறார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடியை நடுவண் அரசு ஒதுக்கியுள்ளது என்று ஒரு அம்சம் அவரது பேச்சில் தெரிவித்திருந்தாலும் தமிழக அரசு போல- வரித்தள்ளுபடி, மக்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.