தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆக உயர்வு. புதிய 6 பேருக்கும் சென்னை மருத்துவமனைகளில் கொரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுமார் 13,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றுவரை தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12ஆக இருந்தது. இன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. கண்டறியப்பட்டுள்ள ஆறு பேர்களில் 5 பேர்கள் முன்னதாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். அதில், ஒருவர் வெளிநாட்டு பயணம் செய்தவர் இல்லை. இன்று கொரோனா பாதித்தவர்கள் குறித்த நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கீச்சுப் பதிவில், ‘நியூசிலாந்திலிருந்து தமிழகத்துக்கு திரும்பிய 65 அகவை முதியவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 அகவை பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலண்டனிலிருந்து திரும்பிய 25 அகவை இளைஞர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய 74 அகவை முதியவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய 52 அகவை கொண்ட மற்றொருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்திலிருந்து திரும்பிய 25 அகவை பெண்மணி கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



