ஏழை, நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கருப்பு பண ஒழிப்பு திட்டம் பயனற்ற பாதிப்பு நிறைந்த நடவடிக்கை என்றும் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிடிபடும் என்பது தான் நடுவண் அரசின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், களநிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. நவம்பர் 28ம் தேதி வரை புழக்கத்தில் இருந்து திரும்;பப் பெற்ற பழைய தாள்களின் மதிப்பு ரூ.13 லட்சம் கோடி என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு கடந்த ஒரு வாரத்தில் வங்கியில் திருப்பிச் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி என வைத்துக்கொண்டால் ஒட்டுமொத்தமாக திரும்பப்பெறப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.13.50 லட்சம் கோடி ஆகும். இன்னும் திருப்புவதற்கு உள்ள நாட்களில் எவ்வளவு தொகை திரும்பும் என்று தெரியாது. இந்திய ரிசர்வ் வங்கியால் ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் விடப்பட்ட அதிக மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி என்று கடந்த 29ம் தேதி பாராளுமன்றத்தில் நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால் வங்கி வளையத்திற்கு வெளியில் உள்ள பழைய தாள்களின் மதிப்பு இதுவரை ரூ.1.94 லட்சம் கோடி தான். இந்தியப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது இது ஒரு பெரிய தொகையல்ல. தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் எந்த சிரமும் இன்றி ரூ.65 ஆயிரம் கோடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதைவிட சற்று அதிக கருப்புப் பணத்தை மீட்பதற்காக ஒட்டுமொத்த ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தியது தேவையா? என்பதை மோடி அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு ஏற்பட்ட வணிகம் மற்றும் உற்பத்தி இழப்புடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகவும் குறைந்த தொகையாகும். நடுவண் அரசின் நடவடிக்கையால் ஏழைகளும், நடுத்தர மக்களும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசின் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயன்களை ஒப்பிட்டு பார்க்கும் போது கருப்புப் பண ஒழிப்பு திட்டம் என்பது எலியைப் பிடிக்க மலையை தகர்த்து அழித்த செயலுக்கு ஒப்பானதாகவே தோன்றுகிறது. பணப்புழக்கம் இன்று வரை சரி செய்யப்படாத நிலையில் ஏழைகள், வணிகர்களின் துயரம் மேலும் நீடிக்கும் என்றே தெரிகிறது. மொத்தத்தில் மோடி அரசின் கருப்புப் பண ஒழிப்புத் திட்டம் பயனற்ற பாதிப்பு நிறைந்த திட்டம் என்பது உறுதியாகியிருக்கிறது. பயனில்லாத இத்திட்டத்திற்காக மக்கள் இனியும் அவதிப்படுவதை அனுமதிக்கக்கூடாது. மக்களின் பயன்பாட்டுக்கு அவசியமான ரூபாய் தாள்களை அதிக அளவில் புழக்கத்தில் விட்டு மக்களின் பாதிப்புகளை குறைக்கவும், தொழில் மற்றும் வணிகத்தை பெருக்கவும் நடுவண் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



