Show all

திமுக போலவேயிருக்கிறது அதிமுகவும்! ஹிந்துத்துவாவை கிண்டல் செய்பவர்களை கண்டிப்பதில்லையாம்: சி.பி.ராதாகிருஷ்ணன் மிரட்டல்

திமுக கடந்த காலங்களில் செய்த அதே தவறைத் தான் அதிமுகவும் செய்கின்றது. ஹிந்துத்துவாக்களுக்கு எதிரான செயல்களை திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை. ஹிந்துத்துவாக்களுக்கு எதிரான கருத்துகளைச் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வரும் தேர்தலில் வெற்றிபெறாது என்று கடுமையாக எச்சரிக்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திராவிட இயக்கங்கள் தோற்றுவிக்கப் பட்டதன் நோக்கமே- பார்ப்பனிய ஹிந்தி மற்றம் ஹிந்துத்துவா மேலாதிக்கத்தில் இருந்து தமிழர்களை மீட்பது என்பதுதான். 

அன்றைக்குக் காங்கிரஸ் ஹிந்தி மேலாண்மையைத் தூக்கிப் பிடித்தது- தமிழகம் ஹிந்திக்கு எதிராய்த் திரண்டது. இன்றைக்கு பாஜக ஹிந்துத்துவா மேலாண்மையைத் தூக்கிப் பிடிக்கிறது- தமிழகம் ஹிந்துத்துவாவிற்கு எதிராக அணிதிரள்கிறது. 

இதிலே கந்தர் சஷ்டி கவசத் திறனாய்வு போன்றவை சிலரால் கூடுதல் உணர்ச்சித் தளத்தில் முன்னெடுக்கப் பட்டு விடுகிறவை. இதில் தமிழக மக்களை எப்படிக் கடுமையாகக் கையாள முடியும் திரவிட இயக்க அரசுகளால். 

நடுவண் அரசிடம் குவிந்துள்ள அதிகாரத்திற்காய் அதை வளைத்திருக்கிற பாஜகவிற்கு, எடப்பாடி பழனிசாமியின் அதிமுக  பணிகிறதேயன்றி- பாஜக முன்னெடுக்கும் ஹிந்துத்துவா மேலாண்மைக்கு தமிழர்களை அடிமைப்படுத்தும் நோக்கத்திற்கு பணிவதானதன்று. 

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிமுக அரசை கடுமையாக எச்சரித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அண்மையில் கறுப்பர் கூட்டம் என்ற வலையொளிப் பக்கத்தில் கந்த சஷ்டி கவசம் பாடலை விமர்சித்து வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக, பாஜக அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. 

கறுப்பர் கூட்டத்தை ஆதரிப்பவர்களோ, குறிஞ்சி நில தமிழர்களின் குலதெய்வத்திற்கும் பாஜகவினருக்கும் தொடர்பு என்ன? எமது மக்களின் தெய்வம் முருகனை அவமதிக்கும் வகையாக கந்தர் சஷ்டி கவசத்தில் இருக்கிற பார்ப்னியப் பிழைகளை சுட்டிக் காட்ட எங்களுக்குத்தானே உரிமை. இதில் எங்கள் குலதெய்வத்தை சாடியதாக கோர்த்து விடுவது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில், மூன்று கோவில்களின் வாசலில் டயர் எரிக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட நிகழ்வும் நடந்தது. இதனைக் கண்டித்து பாஜக அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.

இதன் ஒருபகுதியாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், திங்களன்று, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தனது கண்டனங்களை பதிவு செய்தார். அப்போது, அதிமுக அரசு குறித்து பிழையான கருத்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட முன்னெடுப்பில் மாநில அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது; இது கண்டனத்திற்குரியது. கோவில் சேதப்படுத்தப்பட்ட முன்னெடுப்பில் காவல் துறையினரை சுதந்திரமாக இந்த அரசு செயல்பட விடவில்லை என்று குற்றம்சாட்டினார். 

(சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்களே அப்படியான காவல்துறையின் சுதந்திரத்தையா சொல்லுகின்றார் சி.பி.ராதாகிருஷ்ணன் என்பதை தெளிவு படுத்தினால்- அதுதான் அந்தக் காவலர்கள் குறித்தான விசாரணையை உங்களிடமே கொடுத்து விட்டோமே என்பார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.)

திமுக கடந்த காலங்களில் செய்த அதே தவறைத் தான் அதிமுகவும் செய்கின்றது. ஹிந்துத்துவாக்களுக்கு எதிரான செயல்களைத் திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை. ஹிந்துத்துவாக்களுக்கு எதிரான கருத்துகளைச் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி  தலைமையிலான அரசு வரும் தேர்தலில் வெற்றிபெறாது எனக் கண்டித்துள்ளார். 

(‘ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாக்குகளையும் நீங்களே போட்டுவிடுவது போல பேசுகின்றீர்களே சி.பி.ராதாகிருஷ்ணன்’ இப்படி தமிழக மக்களுக்கு ஐயம் எழக்கூடும் இவரின் இந்தப் பேச்சால்)

மேலும், ஹிந்;துத்துவாக்களுக்கு எதிரான பாடுகளில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனில் நடுவண் அரசு மூலம் மாநில அரசை நிர்பந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணனின் செய்தியாளர் சந்திப்பின்போது வானதி சீனிவாசன், எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.