Show all

பொறியியல் (ஜெஇஇ) மற்றும் மருத்துவ (நீட்) நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்யலாமா! குழப்பத்தில் நடுவண் அரசு

பொறியியல் (ஜெஇஇ) மற்றும் மருத்துவ (நீட்) நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்யலாமா, வேண்டாமா குழப்பத்தில் நடுவண் அரசு இருந்து வருகிறது.  இரத்து செய்திடு! இல்லாவிட்டால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் இந்தியாவில் கடுமையாகப் பரவி வருகிறது கெரோனா.

12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடுவண் அரசின் தொழில் நுட்பப் பல்கலைக்கழகங்களில் பொறியியல் மாணவர் சேர்க்கைககான கூட்டு நுழைவுத் தேர்வும் (ஜெஇஇ), இந்தியா முழுவதும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வும் நடத்தப்படும் தேர்வு நாள் மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்தப் பாட்டில் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் நடுவண் அரசு குழப்பத்தில் உள்ளது. அதேநேரத்தில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்ட மாணவர்களுக்கான 10 மற்றும் 12 பொதுத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடுவண் அரசின் தொழில் நுட்ப பல்கலைக்கழகங்களில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கூட்டு நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) எதிர்வரும் 03-08, ஆடி (ஜூலை 18-23) நாட்களில் நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதேபோல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு 11,ஆடி (ஜூலை26) ல் நடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்வு நாளை ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வலியுறுத்தி வந்தனர். இதை மாணவர்கள் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் தேர்வு நாளை மாற்றுவது தொடர்பாக உறுதியான முடிவு எடுக்க முடியாமல நடுவண் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பெரும் குழப்பத்தில் உள்ளது.

இந்த நிலையில் நாளது 21 ஆனியில் (ஜூலை 5) நடக்க இருந்த நடுவண் ஆசிரியர் தகுதி தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நடுவண் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். நிலைமை சீரானபின் தேர்வு நடத்தப்படும்; புதிய நாள் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ, கொரோனா செயலூக்கத்தில்- குறைந்த இடங்களை வைத்துக் கொண்டு, குறைந்த நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் வகைக்காக, ஆர்வம் உள்ளவர்களைக் கழித்துக் கட்டும் வகையான, இந்த வீணாய்ப் போன நுழைத்தேர்வுகள் முறை ஒழிக்கப்பட்டு, அனைவருக்கும் வாய்ப்பு என்கிற நிலை அல்லது முதன்மைப்பாட்டு அடிப்படையில் வாய்ப்பு என்கிற முறை அமைந்தால் சரிதான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.