தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் போல, மக்கள் மனங்களில் மம்தா இருந்தால் மட்டுமே, பாஜகவின் அடாவடி அரசியலைத்தாண்டி வெற்றி கொள்ள முடியும் என்ற நிலை மேற்கு வங்கத்தில் இருக்கிறது. சாதிப்பாரா மம்தா பானர்ஜி 29,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இடதுசாரிகளின் ஆட்சியை, முடிவுக்கு கொண்டு வரமுடிந்தது மம்தா பானர்ஜியால். ஜோதி பாசு ஆட்சியில் இருந்து விலகிய சில ஆண்டுகளில் இடதுசாரிகளின் கோட்டையை உடைத்து மம்தா பானர்ஜி முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலகிலேயே அதிக நாள்கள் ஆட்சியில் இருந்த பெருமையுடன், வங்கத்தில் இருந்து வந்தது. ஆனாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கம்யூனிச அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மம்தா பானர்ஜியை எதிர்த்து அரசியல் செய்ய, மேற்கு வங்கத்தில் துடிப்பான இடதுசாரி தலைவர்களோ, காங்கிரஸ் தலைவர்களோ இல்லாமல் இருந்தனர். இது மம்தா பானர்ஜி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலிலும் எளிதில் வெற்றி பெற வகை செய்தது. இந்த நிலையில்தான் மேற்கு வங்க அரசியலில் காலூன்றும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டது. மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதே வேகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பல தலைவர்களைத் தங்கள் பக்கம் பாஜக இழுத்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு, மேற்கு வங்கத்தில், மேற்கு வங்க மக்களிடம் தனிஇடம் பெற்றிராத நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் கோட்டையைத் தகர்த்துவிட முடியும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது. இதற்காக மம்தா பானர்ஜியின் நெருங்கிய நண்பர்களைக்கூட பாஜக தன் வசம் இழுத்துவிட்டது. தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜகவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தக் கடுமையான நிலையில், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற துடிப்புடன் மம்தா பானர்ஜி களம் கண்டிருக்கிறார். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் மக்களை நம்பி இருப்பதைப் போலவெல்லாம், இந்தியாவில் எந்தக் கட்சியும் மக்களை நம்பி இல்லை. இந்தியாவில் எந்த மாநில மக்களும் தமிழகம் போல தனித்த அடையாளம் கொண்டும் இயங்கவில்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், சிலபல தலைவர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்து விடலாம். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், தமிழக மக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அவர்கள் மனங்களில் இடம் பிடிக்க சாதித்து, விலைக்கு வாங்கவேண்டும். மேற்கு வங்கத்தில் முதல்வராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையுடைய மம்தா பானர்ஜி, இப்போது மூன்றாவது முறையாக முதல்வர் வேட்பாளராகத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் போல அவர் மக்கள் மனங்களில் இருந்தால் மட்டுமே, பாஜகவின் அடாவடி அரசியலைத்தாண்டி வெற்றி கொள்ள முடியும் என்ற நிலை இருக்கிறது. அவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவாரேயானல் பாஜகவை வடக்கில் விரட்ட ஒரு மாநிலம் இருக்கிறது என்று இந்தியா பெருமைகொள்ள முடியும்.
மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை தேர்தல் கருத்துப் பரப்புதலுக்கு நந்திகிராமிற்கு சென்றபோது, யாரோ 4, 5 ஆட்கள் தன்னை காரில் தள்ளி கதவை அறைந்ததில் தன் காலில் அடிபட்டுவிட்டது என்று கூறி கட்டுப்போடப்பட்ட காலுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சக்கர நாற்காலியில் சென்று கருத்துப் பரப்புதல் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மம்தா.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



