Show all

அணையைக் காத்த சிறுவன் கதையைப் பொருத்திப் பார்க்கலாமா! கொரோனா நடவடிக்கைகளோடு

அந்தக்காலத்தில் கொஞ்சமாக படிக்கும் வகையாக கல்வித்திட்டம் இருந்தது. படித்தவர்களுக்கு நிறைய அறிவு இருந்தது. துணிச்சலும் இருந்தது. இன்றைக்கு நிறைய படிக்கும் வகையாக கல்வித்திட்டம் இருக்கிறது. படித்தவர்களால் குறைவான அறிவைத்தான் தேத்திக் கொள்ள முடிகிறது. துணிச்சல் அறவேயில்லை.

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நெதர்லாந்தின் புவியியல் அமைப்பு கடல் மட்டம் உயர்வாகவும் தரைமட்டம் தாழ்வாகவும் கொண்டது. நெதர்லாந்து நாட்டினர் தரைப்பகுதியைப் பாதுகாப்பதற்கு ஒரு நெடிய அணையைக் கட்டியிருந்திருக்கிறார்கள்.

ஒரு நாள் சிறுவன் ஒருவன் அந்த அணை வழியாகச் செல்கிறான். அங்கே ஒரு துளையில் கடல் நீர் தரைக்குள் வருவதை கவனித்திருக்கிறான். உடனடியாக தன் கையினால் அந்தத் துளையை அடைக்கின்றான். முடியவில்லை. நீர்க் கசிவு கட்டுப்படாதிருக்க, தன் முதுகை அணை யோடு ஒட்டிக் கொண்டு நீர்க்கசிவைத் தடுக்கின்றான்.

மகனைக் காணாத தந்தை அவனைத் தேடிச் செல்கிறார். கொட்டும் பனியில் இருள் சூழ்ந்த அந்த வேளையில் தன் மகன் கடல் அணையோடு தன் முதுகை வைத்தபடி இருப்பதைக் கண்டார். நிலைமையை உணர்ந்து கொண்ட அவர் ஊருக்குள் சென்று செய்தியைக் கூறுகிறார்.

ஊர் மக்கள் திரண்டு வந்து நீர்க்கசிவு ஏற்பட்ட அந்த அணையை அடைத்து விடுகின்றனர். அன்று அந்தச் சிறுவன் செய்த தியாகம் நெதர்லாந்து தேசத்தை காப்பாற்றியது. நமக்கு என்ன வென்று அந்தச் சிறுவன் நினைத்திருந்தால் அந்தத் தேசம் அழிந்திருக்கும்.

இப்படி ஒரு பாடத்தை ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான்காம் வகுப்பு படித்தவர்கள் தங்கள் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் படித்திருப்பார்கள். 

அந்த அணையின் சிறு துளை போலத்தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனாவும் கிளம்பியது. சனவரி இறுதி கிழமையில் கொரோனா குறித்து பரவி வந்த செய்தி இதுதான். இந்தச் செய்தி வெளியாகிய நாள்: 08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (சனவரி 22).

மனிதர்கள் இதுவரை கண்டிராத நுண்ணுயிரி ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கொரோனா நுண்ணயிரி வகையைச் சேர்ந்த இந்த நுண்ணயிரியால் சீனாவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த நுண்ணயிரி பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்கா திரும்பிய 30 அகவை நபர் ஒருவர் இந்த நுண்ணயிரி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் பரவத் தொடங்கிய இந்த நுண்ணயிரி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த புதிய நுண்ணயிரியால் பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் சீனாவின் வுகான் மாகாணம் சென்று திரும்பியவர்கள்.

(!) நுண்ணயிரி அச்சுறுத்தல் காரணமாக வட கொரியா தற்காலிகமாக வெளிநாட்டவர்களுக்கு தங்களது எல்லையை மூடியுள்ளது.
(!) ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகள் வுகான் மாகாணத்தில் இருந்து வரும் விமானப் பயணிகளை சோதனை செய்தே அனுமதிக்கின்றன.
(!) 2019-nCoV  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நுண்ணயிரி சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.
(!) இந்த நுண்ணயிரி பரவல் சீன நகரமான வுகானில் தொடங்கியது.
(!) 1.1 கோடி மக்களைக் கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது.
(!) வுகானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
(!) அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடித் தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக நலங்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
(!) இபோலா, பன்றிக் காய்ச்சல் ஆகியவை பரவியபோது அறிவிக்கப்பட்டதுபோல, இந்த நுண்ணயிரி பரவலையும் சர்வதேச நலங்கு நெருக்கடியாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து உலக நலங்கு நிறுவனம் இன்று முடிவு செய்யவுள்ளது.
(!) சீன நுண்ணுயிரி மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது உறுதி
(!) சர்வதேச நலங்கு நெருக்கடியாக இது அறிவிக்கப்பட்டால், இதன் பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(!) 2019-nCoV நுண்ணுயிரி முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
(!) கொரோனா நுண்ணுயிரி என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த நுண்ணுயிரி குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் நுண்ணுயிரி சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.
(!) இந்த நுண்ணுயிரி மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
(!) சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த நுண்ணுயிரியால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.
(!) இந்த நுண்ணுயிரி தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.

இந்த நுண்ணுயிரி இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும்.
(!) மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து இவ்வளவு தெளிவான விளங்கங்கள் செய்தியாக வெளியான போதும் கூட, நமது நாட்டிற்கும் வெளி நாடுகளுக்குமாக விமானங்களைப் பறக்க அனுமதித்துக் கொண்டுதாம் இருந்தது நடுவண் அரசு.

பின் மார்ச் 22 ல் கொரோனாவிற்கு எதிராக கையைத் தட்ட அறிவித்தது. இரண்டு நாளில் 21நாட்கள் ஊரடங்கை அறிவித்தது நடுவண் அரசு. சந்து பொந்து இண்டு இடுக்குகளில் எல்லாம் ஊரடங்கு தேவையா என்று யோசிக்காமல் நடுவண் அரசு. 

கடந்த இரண்டு மாதங்களில் ஊரடங்கால் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு, தற்போது இங்கெல்லாம் ஊரடங்கு தேவையில்லை அங்கெல்லாம் ஊரடங்கு தேவையில்லை என்று தளர்வுகளை அறிவித்துக் கெண்டிருக்கிறது. உண்மையில் தற்போது தளர்வுகள் முன்னெடுக்கிற எந்தப் பகுதியிலும் ஊரடங்கு முன்னெடுத்திருக்கவே வேண்டாம்.

தற்போதைய நிலையில்- மக்கள் பெரிதும் பாதித்தது கொரோனாவாலா? ஊரடங்காலா என்று பட்டி மன்றம் நடத்தினால் ஊரடங்கு அணிக்கு நிறைய நிறைய பேச முடியும்.

இந்தியாவில் ஊரடங்கால் பாதித்தவர்கள் எண்பது விழுக்காட்டு மக்கள். அதாவது: 110,28,67,600 பேர்கள். அந்த 110,28,67,600 பேர்களும் வெளியில் மீண்டு வர சில ஆண்டுகள் ஆகும். உயிர்பலிகளும் நடக்கும், நடந்தும் விட்டன. 

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்றைய நிலவரத்தில்: 1,25,101 பேர்கள். அவர்களில் குணமடைந்தவர்கள் 51,784பேர்கள். மீதம் சிகிச்சையில் இருபபவர்கள்: 69597 பேர்கள். இவர்களும் உறுதியாக குணமாவார்கள். சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் 3720.

கொரோனாவிற்கு விளக்கணைத்து ஏற்றல் அரசியல்வாதிகளால் அறிவிக்கப்பட்ட போது, மிகச்சில மணி நேரங்களில் அது மின்சார வாரியத்திற்கு பெரிய பாதிப்பைத் தரும் என்றும், இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் துறைசார் அறிஞர்கள் அறிவித்தார்கள். 

அரசியலில் இருப்பவர்களுக்கு துறைசார் அறிஞர்களைக் கலந்து கொண்டு அறிவிப்பை உருவாக்குகிற அறிவு வேண்டும். பணமதிப்பிலிருந்து, 'நீட்'டிலிருந்து எல்லாவற்றிலும் தான்தோன்றித்தனமே முன்னெடுக்கப் படுகிறது. 

அந்தக்காலத்தில் கொஞ்சமாக படிக்கும் வகையாக கல்வித்திட்டம் இருந்தது. படித்தவர்களுக்கு நிறைய அறிவு இருந்தது. துணிச்சலும் இருந்தது. இன்றைக்கு நிறைய படிக்கும் வகையாக கல்வித்திட்டம் இருக்கிறது. படித்தவர்களால் குறைவான அறிவைத்தான் தேத்திக் கொள்ள முடிகிறது. துணிச்சல் அறவேயில்லை. பலர் நமக்கேன் வம்பு என்று பதவி விலகுகிறார்கள். சிலர் பதவிக்காவே நியாயத்தை விற்கின்றார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.