திகிலூட்டும் அதிர்ச்சிக் காட்சி யொன்றின் காணொளி, இன்றைய தலைப்பாகி வருகிறது. பார்ப்பதற்கு வியப்பையூட்டும் இந்த நிகழ்வு ஒரு கண்காணிப்பு படக்கருவியில் சிக்கியுள்ளது. 10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: திகிலூட்டும் அதிர்ச்சிக் காட்சி யொன்றின் காணொளி, இன்றைய தலைப்பாகி வருகிறது. பார்ப்பதற்கு வியப்பையூட்டும் இந்த நிகழ்வு ஒரு கண்காணிப்பு படக்கருவியில் சிக்கியுள்ளது. மலைத் தொடர்களில் நிலச்சரிவு ஏற்படுவது என்பது வாடிக்கையான நிகழ்வுதான். கொடைக்கானல், உதகை போன்ற மலை சாலைகளில் நிலச்சரிவு குறித்த செய்திகளை நாம் அடிக்கடி கேள்விபட்டிருப்போம். குறிப்பாக மழைக் காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். எதிர்பாராமல் நிகழும் நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்த சோகங்களும் நடந்துள்ளன. நிலச்சரிவு ஏற்படுவதற்கு மனித செயல்பாடுகள் மிகவும் முதன்மையான காரணங்களாக உள்ளன. தற்போது மலை பகுதிகளில் அதிகளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக மரங்களை கணக்கு வழக்கில்லாமல் வெட்டி வீசுவதால், நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து விடுகிறது. மனித செயல்பாடுகள் மட்டுமின்றி, கன மழையின்போதும், நில நடுக்கத்தின்போதும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், ஒரு மலைச் சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து ஸ்கூட்டர் ஓட்டி வந்த ஒருவர் நூலிழையில் மண்ணுக்குள் முழுகாமல் தப்பித்த காணொளிக் காட்சி தற்போது தீயாகப் பரவி வருகிறது. ஒரு நொடி தாமதித்திருந்தால், அவர் நிலச்சரிவில் சிக்கி புதையுண்டிருப்பார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தபோதும் அவரது ஸ்கூட்டர் நிலச்சரிவில் புதையுண்டு விட்டது. அந்தக் காணொளிக் காட்சியில் நடுத்தர அகவையுடைய ஒரு நபர் ஸ்கூட்டரில் வருவதை நம்மால் காண முடிகிறது. சாலையை நோக்கி வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த நபர் அந்தத் துல்லிய இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, பாறைகள், கற்கள் மற்றும் மரங்கள் சரிந்து வருவதை நம்மால் காணொளியில் காண முடிகிறது. அந்த சமயத்தில் ஸ்கூட்டர் ஓட்டி வந்தவர் வேகமாக வந்தார். அப்போது மண் சரிந்து முழுவதுமாக சாலைக்கு வந்து விட்டது. அவர் வேகமாக வந்தாலும் கூட அந்தத் துல்லிய இடத்திற்கு அவரும் சரிவும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. நல்லவேளையாக அவர் வண்டியை விட்டு விட்டு எகிறி குதித்து ஓடி தப்பிக்கிறார். உண்மையிலேயே அவர் மண்ணிற்குள் புதையாமல் தப்பித்தது சாதனை என்றே காணொளி பார்ப்பவர்களுக்கு புரிகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் ஸ்கூட்டரை கீழே போட்டு விட்டு, எழுந்து ஓடி வந்து விட்டார். நிலச்சரிவுகள் எவ்வளவு வேகமாக நடக்கும் என்பதை இந்த காணொளி மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இது மிகச்சிறிய நிலச்சரிவுதான். ஸ்கூட்டர் மூழ்குவதைத் தாண்டி மண் சரிந்து ஓடவில்லை. இதற்கே அந்தச் சாலையில் போக்குவரத்து தடைபடும் அளவிற்கான சூழல் ஏற்பட்டு விட்டது. அங்கு இருந்த சிறு மரங்கள் மற்றும் தாவரங்கள் வேரோடு பிடுங்கி கொண்டு வந்து விட்டன. எனவே மலைச் சாலைகளில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. சற்று எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாக நிலச்சரிவுகளில் சிக்கும் அபாயத்தை தவிர்க்கலாம். வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் இருந்தால், சில அறிகுறிகளை வைத்து, நிலச்சரிவு ஏற்படவுள்ளதை முன்கூட்டியே கணிக்க முடியும். சுற்றுப்புறத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டு வாகனங்களை ஓட்டினால், உங்களால் நிலச்சரிவு ஏற்படவிருப்பதை நிச்சயமாக கணிக்க முடியும். பொதுவாக பாறைகள் மற்றும் சிறிய கற்கள் கீழே விழுவதன் மூலமாகதான் நிலச்சரிவு தொடங்கும் என்கின்றனர் அனுபவம் மிக்க ஓட்டுநர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



