Show all

எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்குத்தான் வேண்டும்! அடம் பிடிக்கும் பன்னீர் செல்வம்

எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்றும், கட்சியில் பன்னீருக்கு இதுவரையிலான மதிப்பு மரியாதையெல்லாம் பாஜகவின் நிர்பந்தம் காரணம் பற்றியே, தற்போது அதிமுக ஆட்சியில் இல்லாத நிலையில், பன்னீருக்கெல்லாம் இனி அதிமுகவில் சிறப்பு பதவிகள், மரியாதைகளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 

22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பத்து விழுக்காட்டு உறுப்பினர்களுக்கு மேல் அதிகம் பெற்றிருக்கும் ஒரு கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் தகுதி வழங்கப்படும். 

இந்த கணக்கின்படி, தமிழகத்தில் குறைந்தபட்சம் 24 சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு கட்சி பெற்றிருந்தால், அந்த கட்சியைச் சேர்ந்தவருக்கு சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் தகுதி வழங்கப்படும்.

அமைச்சருக்கு நிகரான தகுதியுடைய இந்தப் பதவிக்கு சலுகைகள் ஏராளம். அரசு மாளிகை, காவல்துறை பாதுகாப்பு, வாகன வசதி, பயணப்படி, மருத்துவ வசதிகள் என ஆட்சி முடியும் வரை அரசின் சலுகைகளை அனுபவிக்கலாம். மிக முதன்மையான பாடுகளைச் சட்டமன்றத்தில் எழுப்பி, அதன்மீது விரிவான விவாதம் நடத்தக் கோரவும், சட்டமன்றத்தில் முன்வரிசையில் முதல் இருக்கையில் அமரவும் எதிர்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு.

நெடுஞ்செழியன், கருணாநிதி, க.அன்பழகன், செயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் எனப் பல தலைவர்கள் பொறுப்பேற்று செயல்பட்ட முதன்மைத்துவம் வாய்ந்த இந்தப் பதவியை, தனக்கு வேண்டுமென பன்னீர் கேட்பதுதான் எடப்பாடியை கடுப்பேற்றியிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தனக்கும் எடப்பாடிக்கும் நெருங்கிய சில நிர்வாகிகளிடம், தன்னுடைய விருப்பத்தை பன்னீர் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை நம்ம கட்சி ஆட்சியமைக்க முடியலைனா, எதிர்கட்சித் தலைவர் பதவியை நான் பொறுப்பேத்துக்கனும்னு என் ஆதரவாளர்கள் விரும்புறாங்க என்றிருக்கிறார் பன்னீர். இந்தத் தகவல் எடப்பாடியின் காதுக்குச் சென்றும், அவர் கண்டுகொள்ளவில்லை. அன்றிலிருந்தே பன்னீரின் மனம் தகிக்க ஆரம்பித்துவிட்டது. 
அம்மா இருந்தபோதே எதிர்கட்சித் தலைவராகவும், துணைத் தலைவராகவும் நான் இருந்திருக்கேன். இப்ப நானே எதிர்கட்சித் தலைவர் பதவியை நேரடியாகக் கேட்டா அது நல்லா இருக்காது. நீங்க நாலு பேருகிட்ட பேசும்போது, எனக்கு ஆதரவாப் பேசுங்க என்று பலரிடமும் கருத்துப் பரப்புதல் செய்துவருவதாகத் தெரியவருகிறது. 

இந்த நிலையில் பன்னீரிடம் கலந்துரையாடல் நடத்துவதற்காக கழக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி தொகுதியில் வெற்றி பெற்றவருமான கே.பி.முனுசாமியை போடிநாயக்கனூருக்கு அனுப்பினார் எடப்பாடி.

போடியில் பன்னீரைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ‘கட்சிக்காக நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுங்கண்ணே’ என்றதும்தான் தாமதம், பன்னீருக்கு சுர்ரென கோபம் தலைக்கேறிவிட்டது. முதல்வர் வேட்பாளரை விட்டுக் கொடுக்கச் சொன்னீங்க, விட்டுக் கொடுத்தேன். வழிகாட்டுதல் குழுவுல அவர் தன் ஆதரவாளர்களை அதிகமாக நியமிச்சப்போ விட்டுக் கொடுக்கச் சொன்னீங்க, விட்டுக் கொடுத்தேன். இதுக்கு மேல விட்டுக் கொடுக்குறதுக்கு எதுவும் இல்லைங்க. எதிர்கட்சித் தலைவர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுக்குறதா தேர்தலுக்கு முன்னாடி நாம எதுவும் பேசிக்கலை. நான் தான் அந்தப் பொறுப்பை ஏத்துக்கணும்னு கட்சிக்காரங்க விரும்புறாங்க. வெள்ளிக் கிழமை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்குதுல, அங்க அதையெல்லாம் பேசிக்கலாம்’ என்று தடாலடியாக கூறியிருக்கிறார் பன்னீர். மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் முனுசாமி கிளம்பிவிட்டார்” என்று செய்தி வெளியாகியிருக்கிறது.

அதிமுக வெற்றிபெற்றுள்ள 65 இடங்களில், சரிபாதிக்கு மேல் கொங்கு மண்டலத்திலிருந்துதான் கிடைத்திருக்கிறது என்பதால் எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்றும், கட்சியில் பன்னீருக்கு இதுவரையிலான மதிப்பு மரியாதையெல்லாம் பாஜகவின் நிர்பந்தம் காரணம் பற்றியே, தற்போது அதிமுக ஆட்சியில் இல்லாத நிலையில், பன்னீருக்கெல்லாம் இனி அதிமுகவில் சிறப்பு பதவிகள், மரியாதைகளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.