நீட் தேர்வை நீக்கிட வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளோடு, மு.க.ஸ்டாலின் தலைமைஅமைச்சர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார். 03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் முதலமைச்சாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அவருக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பை ஒன்றிய அரசு வழங்குகிறது. நீட் தேர்வை நீக்கிட வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை மு.க.ஸ்டாலின் தலைமைஅமைச்சர் மோடியிடம் வலியுறுத்துகிறார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக கடந்த 24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123 (07.05.2021) அன்று மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், உயிர்வளி, கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்து தேவைகள் குறித்து தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்களை எழுதி வந்தார். அத்துடன், செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், 7 பேர் விடுதலை ஆகியன குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. மேலும், தற்போது தமிழ்நாட்டில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய சரக்குசேவைவரி பாக்கித்தொகை தேவைப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம், காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கிருந்து தேர் மூலம் புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார். பின்னர் டெல்லியில் உள்ள திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்புகிறார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் இருந்து தேர் மூலம் புறப்பட்டு தலைமைஅமைச்சர் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு இன்று மாலை 5 மணிக்கு தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைஅமைச்சரிடம் அவர் கொடுக்கவுள்ளார். அதில் நீட் தேர்வை நீக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிக்கவுள்ளார். இன்று இரவு டெல்லியில் அவர் தங்குகிறார். அதனைத்தொடர்ந்து நாளை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசுகிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாட்டுத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட சில அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் உள்ளனர். முதலமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் டெல்லிக்கு முதல் முறையாக செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சில அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பை ஒன்றிய அரசு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.