டெல்லியில் தோழியுடன் சென்ற 18 அகவை ஆண் நண்பரை இளம்பெண்ணின் குடும்பத்தினரே அடித்துக்கொன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தலைநகர் டெல்லியின் அதர்ஷ் நகரை சேர்ந்த 18 அகவை இளைஞன் இராகுல்ராஜ்புத், அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் கலைஇளவல் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். மேலும், இவர் தனது வீட்டில் மாணவ மாணவியருக்கு தனிவகுப்பும் நடத்தி வந்தார். இதற்கிடையில், இராகுல் ராஜ்புத்திற்கும் அதே பகுதியில் வசித்துவரும் ஒரு இளம்பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இராகுலின் நட்பு அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும், தனது தோழியுடன் இராகுல் தொடர்ந்து நட்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண்ணின் அண்ணன் உள்பட குடும்ப உறுப்பினர்கள் சிலர் கடந்த புதன்கிழமை இரவு அதர்ஷ் நகர் தெருவில் தனது தோழியுடன் சென்ற இராகுலை இடை மறித்துள்ளனர். மேலும், இராகுல் ராஜ்புத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இராகுல் ராஜ்புத்திற்கும் அவரது தோழியின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த இளம்பெண்ணின் உறவினர்கள் இராகுல் ராஜ்புத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ராகுலை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், படுகாயமடைந்த ராகுல் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரங்களில் உயிரிழந்தார். இந்த முன்னெடுப்பு தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளம்பெண்ணின் அண்ணன் முகமது ராஜ் (20) மற்றும் உறவினர்கள் அன்வர் ஹசன் (20) உள்பட மொத்தம் 5 பேரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், உயிரிழந்த இளைஞன் இராகுலின் தந்தையை சந்தித்து ஆறுதல் கூறிய டெல்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா, இந்த நிகழ்வில் தொடர்புடைய அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்க டெல்லி அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



