Show all

பட்டாசு வெடிக்க தடை வேண்டாம்! ராஜஸ்தான், ஒடிசா முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் மடல்

காற்று மாசு, ஒலி மாசு விதிகளின் படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு சிக்கல் ஏற்படாது. எனவே, பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறி உள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி ராஜஸ்தான் மற்றும் ஒடிசா முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பட்டாசு உற்பத்தியில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பரிமாற்றக்காரர்கள் என 8 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 

இந்திய நாட்டின் பட்டாசு பயன்பாட்டில் 90 விழுக்காடு உற்பத்தியைத் தமிழகம் கொண்டுள்ளது. காற்று மாசு, ஒலி மாசு விதிகளின் படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு சிக்கல் ஏற்படாது. எனவே, பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

எதிர்வரும் 29,ஐப்பசி (14.11.2020) வெடித்திருவிழாவில் இந்தியாவையே வெளிச்சமாக்க தமிழகம் தன் உற்பத்தி பணிகளை பெரும்பாலும் முடித்துக் கொண்டு விட்டது. பட்டாசுகள் இந்தியா முழுவதும் பரிமாற்றக்காரர்களுக்கு பெரும்பாலும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. பல்வேறு மாநிலங்கள் முன்னெடுக்கும் பட்டாசு வெடிப்பதற்கு தடை என்பது அவரவர்கள் மாநிலத்தைச் சார்ந்த பட்டாசு பரிமாற்றக்கார வணிகர்களையே பெரிதும் பாதிக்கும். இதை அந்தந்த மாநில முதல்வர்கள் உணர்ந்து பட்டாசுத் தடையை விலக்கிக் கொள்ளுமாறு நாமும் கேட்டுக் கொள்கிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.