Show all

வெடித்திருவிழாவும் நாமும்!.

காற்று மாசு, ஒலி மாசு விதிகளின் படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு சிக்கல் ஏற்படாது. எனவே, மற்ற சில மாநிலங்கள் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படியும், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வெடித்திருவிழாவை கொண்டாடும் படியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

22,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: விழாமல் இருப்பதற்கு விழா என்று, தமிழர் ஆண்டிற்கு ஐந்து விழாக்களை பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர்.

சித்திரை முதல் நாளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை 5122 ஆண்டுகளாக பல்வேறு அயல்மரபுகளின் ஆட்சியில் உட்பட்டிருந்த நிலையிலும் விடாப்பிடியாய் கொண்டாடி வருகின்றனர் தமிழர். விடாப்பிடியாய் கொண்டாடுவதற்கு காரணம், தமிழ் ஆண்டுக்கணக்கு நுட்பமான கணிப்புகளைக் கொண்டதால், நினைவில் நிறுத்திக் கொள்ள முடியாமல், அவ்வப்போது பலர் அதிலிருந்து விலகி, அன்னிய காலக்கணக்கு நடைமுறைக்குப் போய்விடுகின்றார்கள். இந்த விழாவிற்கான உற்பத்தியும் வணிகப் பொருட்களும் எழுது பொருட்களே. 

அடுத்த விழா, தை முதல்நாளில் கொண்டாடுகிற பெங்கல்விழா. இது தொய்வில்லாமல் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டாடப்பட்டே வருகிறது. இந்த விழாவிற்கான உற்பத்தியும் வணிகப் பொருட்களும் அரிசி, பருப்பு, உப்பு, வெல்லம், கரும்பு, மஞ்சள், பழங்கள், பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஏலம், முந்திரி, நெய், இப்படி பலவாகும்.

அடுத்த விழா ஆடியில் கொண்டாடுகிற நீர்ப் பெருக்கு விழா. இது பெரும்பாலும் காவிரிக்கரையை யொட்டி பல ஆயிரம் ஆண்டுகளாக முன்னெடுக்கப்படுகிற விழாவாகும். இந்த விழாவிற்கான உற்பத்தியும் வணிகப் பொருட்களும் நீர் பயன்பாடு, மதகு, அணை, பயறு வகைகள், ஆடிப்பட்டம் தேடி விதை என்கிற விதை உற்பத்தி போன்றவைகள் ஆகும்.

அடுத்த விழா கார்த்திகையில் கொண்டாடப்படுகிற விளக்கேற்றுத் திருவிழா. இந்த விழாவும் பல ஆயிரம் ஆண்டுகாளாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் விழாவே. இந்த விழாவிற்கான உற்பத்தியும் வணிகப் பொருட்களும் எண்ணெய், மண், மற்றும் உலோகத்தாலான விளக்குகள், தீயூட்டும் கருவிகள், ஏரியூட்ட விளைச்சல் கழிவுகள் போன்றவைகள் ஆகும்.

அடுத்து வருவன குடும்பங்கள் தனித்தனியாகவோ கூடியோ முன்னெடுக்கிற திருமண விழா, வணிக ஒத்துழைப்பிற்கான மொய்த் திருவிழா, காதணிவிழா, பூப்புநன்னீராட்டு விழா, வளைக்காப்பு விழா, தெவம் என்கிற நடுகல் திருவிழா என்பன ஆகும். இந்த விழாவிற்கான உற்பத்தியும் வணிகப் பொருட்களும் அனைத்து விழாக்களையும் உள்வாங்கிய அனைத்துப் பொருட்களுமாகும்.

அடுத்து நம்மோடு உறவில் இருக்கும் அயல் மரபினரின் விழாக்களையும், தமிழர் நீண்டகாலமாகக் கொண்டாடி வருகின்றோம். அப்படிக் கொண்டாடுவதில் முதன்மையானது பார்ப்பனியர்களின் வெடித்திருவிழா ஆகும். இந்த விழாவிற்கான உற்பத்தியும் வணிகப் பொருட்களும் வெடி பொருட்களே.

எதிர்வரும் 29,ஐப்பசி (14.11.2020) வெடித்திருவிழாவில் இந்தியாவையே வெளிச்சமாக்க தமிழகம் தன் உற்பத்தி பணிகளை பெரும்பாலும் முடித்துக் கொண்டு விட்டது. பட்டாசுகள் இந்தியா முழுவதும் பரிமாற்றக்காரர்களுக்கு பெரும்பாலும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. பல்வேறு மாநிலங்கள் முன்னெடுக்கும் பட்டாசு வெடிப்பதற்கு தடை என்பது அவரவர்கள் மாநிலத்தைச் சார்ந்த பட்டாசு பரிமாற்றக்கார வணிகர்களையே பெரிதும் பாதிக்கும். இதை அந்தந்த மாநில முதல்வர்கள் உணர்ந்து பட்டாசுத் தடையை விலக்கிக் கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம். தமிழக முதல்வரும் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

வெடித்திருவிழாவின் போது பட்டாசு விற்பனை கடல் என்று சென்னை தீவுத்திடல் அழைக்கப்படுகிறது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பட்டாசு வாங்குவதற்காக தீவுத்திடலுக்கு படையெடுத்து வருவது வழக்கம். எனவே வெடித்திருவிழா பருவம் தொடங்கியதும், தீவுத்திடலில் எப்போது பட்டாசு விற்பனை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு வெடித்திருவிழாவிற்கான பட்டாசு விற்பனை இன்று (சனிக்கிழமை) தொடங்க உள்ளது. தீவுத்திடலில் 40 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பு போல கூட்ட நெரிசல் இல்லாமல் இருப்பதற்காக சமூக இடைவெளியை பின்பற்றி, பட்டாசு வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று மாலை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், பட்டாசு கடைகளுக்கான உரிமம் இன்னும் வியாபாரிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்க செயலாளர் அனீஸ் ராஜா கூறுகையில், “பட்டாசு கடைகளுக்கான உரிம சான்று எங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. நாளை (இன்று) காலை எங்களுக்கு உரிமம் வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். எங்களுக்கு உரிமம் கிடைத்துவிட்டால் அரசு வகுத்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து, பட்டாசு கடைகளை திறந்து விற்பனையில் ஈடுபடுவோம்” என்றார்.

எனினும் திட்டமிட்டப்படி தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 80 கடைகள் அமைக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு கடைகளின் எண்ணிக்கை 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நாம் நம்மோடு தொடர்பில் இருக்கிற மதங்களின், மரபுகளின் விழாக்களையும் கொண்டாடுவது, தமிழர்களின் விழா அடிப்படையான உற்பத்தி வணிகம் சார்ந்ததே. அவர்கள் விழாக்களின் மத அடிப்படைகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு நாம் அந்த விழாக்களை முன்னெடுப்பதாக வடஇந்திய ஹிந்துத்துவா ஆதிக்கத் தலைவர்கள் நினைத்துக் கொண்டு நம்மை ஒருங்கிணைக்க முயல்வது தொடர்பான முன்னெடுப்புக்கள்- அவர்களுக்கு பகல் கனவாகவே முடியும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.