‘வருவாயை இழந்து, அவசரமாக நிதி தேவைப்படக் கூடிய மாநில அரசுகளுக்கும் நடுவண் அரசு நிதி வழங்க வேண்டும்’ உங்களின் அடுத்த அறிவிப்பு அதுவாக இருக்கும் என்று நம்புகிறேன்! நிர்மலா சீதாராமனுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம். பன்னீர் செல்வத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:; கொரோனா ஊரடங்கால் வருவாயை இழந்துள்ள மாநில அரசுகளுக்கும் நிதி வழங்க வேண்டும் என, தலைமைஅமைச்சர் மோடி மற்றும் நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நடுவண் அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களால், இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்று நம்புவதாக கூறியுள்ளார். சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் வருவாயை இழந்து, அவசரமாக நிதி தேவைப்படக் கூடிய மாநில அரசுகளுக்கும் நடுவண் அரசு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஓ.பன்னீர்செல்வம், நடுவண் அரசின் அடுத்த அறிவிப்பாக அது இருக்கும் என்று நம்புவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆம் இதுதாம் காலத்தின் கட்டாயமான அறிவிப்பாக இருக்க முடியும். சிறு குறு நிறுவனங்கள் கடன் கேட்டு, அதிகாரிகளும் வங்கிகளும் அங்கீகரித்து, அப்புறம் அவர்கள் கடன் வாங்கி, அதெல்லாம் போகாத ஊருக்குக் காட்டும் வழியே. அந்த வழிக்கு 20இலட்சம் கோடி என்ன கோடி கோடி கோடி என்று கூட அறிவிக்கலாம். மக்கள் காதில் பூ சுற்றுகிற வேலைதானே தாராளமாக செய்யலாம். ஆனால், மாநில அரசுகள் ஏராளமான செலவுகளை செய்துவிட்டும், ஏராளமான வருவாயை இழந்துவிட்டும், பித்தம் தெளிய (பொருளாதார நெருக்கடி) டாஸ்மாக்கை திறக்கலாமா? இன்னும் வருமானம் வரக்கூடிய கேவலமான வேலைகள் இருந்தால் கூட செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன. முதலில் அவர்களுக்கு நடுவண் அரசு நிதியை ஒதுக்கட்டும் என்பதே மக்களின், மாநில அரசுகளின் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



