மூன்றாவது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய தலைமைஅமைச்சர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. மூன்றாவது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய தலைமைஅமைச்சர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக பதவியேற்கிறார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் குவிந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வெற்றிபெற்ற வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சியினர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்சென்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு நேரில் சென்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் இடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், புதிய அரசியல் அணுகுமுறைக்கான தொடக்கம் இது என்றார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனது கீச்சுப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வகுப்புவாத அரசியலை, வளர்ச்சிக்கான அரசியல் வீழ்த்தியுள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளதாக கூறியுள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்கள் பா.ஜ.கவையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். நாடு, மக்களின் குரலால் வழிநடத்தப்பட வேண்டுமே அன்றி, மனதின் குரலால் வழிநடத்தப்பட கூடாது என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து டெல்லியில் குடியேறிய மக்கள், பாஜகவின் ஆபத்தான நிகழ்ச்சி நிரலை வீழ்த்தியுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தேர்தல் வெற்றிக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தலைமை அமைச்சர் மோடி, கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியனருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி மக்களின் எதிர்பார்ப்பை அவர்கள் நிறைவேற்ற வாழ்த்து என்றும் தெரிவித்தார். இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது வாழ்த்துக்கள் இந்தச் செய்தி மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சென்றடையட்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



