சட்டமன்றத்தை தீர்மான மன்றமாக்கி, ஆளுநருக்கு அதிகாரத்தை தூக்கிக் கொடுத்து விட்ட அதிமுகவே எழுவர் விடுதலை தாமத்திற்கு முழுக்க முழுக்க காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. 29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட ஏழு பேர் சிறையில் வாடி வருகிறார்கள். இவர்கள் எழுவரையும் தமிழக அரசே விடுவித்துக் கொள்ளலாம் என்று உச்சஅறங்கூற்று மன்றம் தெரிவித்தது. ஆனாலோ அதிமுக அரசு அந்தப் பொறுப்பை ஆளுநரிடம் தூக்கிக் கொடுக்கும் முகமாக, எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அந்தத் தீர்மானத்தை ஆளுநரின் ஒப்புதலுக்கும் தமிழக அரசு அனுப்பி வைத்தது. தமிழக அரசின் தீர்மானத்தின் மீது எந்த முடிவையும் அறிவிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இந்த முன்னெடுப்பில் அதிமுக அரசும் அடுத்தகட்ட நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தன. இந்நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கவும் கோப்புகளை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை எதிர்த்தும் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இத்தனை மாதங்கள் கோப்புகளை நிலுவையில் வைத்திருப்பது ஏன்” என ஆளுநருக்கு அறங்கூற்றுவர்கள் கேள்வி எழுப்பினர். “இதற்கான பதிலை ஆளுநரிடமிருந்து தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும். இதை அறங்கூற்றுமன்றம் கேட்காது” என்று அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. “இதற்கான பதிலை ஆளுநரிடமிருந்து தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும். இதை அறங்கூற்றுமன்றம் கேட்காது” என்கிற அறங்கூற்று மன்ற உத்தரவு எதன்பாற்பட்டதாக இருக்கும் என்று யோசித்தால் நமக்குக் கிடைக்கும் விடை:- எழுவரை தமிழக அரசே விடுவித்துக் கொள்ளலாம் என்றே அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. அந்தப் பொறுப்பை ஆளுநரிடம் தூக்கிக் கொடுத்தது நீங்கள்தானே? எந்த அடிப்படையில் ஆளுநரிடம் பொறுப்பை தூக்கிக் கொடுத்தீர்களோ அந்த அடிப்படையில் நீங்களே அதைக் கேட்டுப் பெறுங்கள் என்று தெரிவித்திருக்கலாம். என்றே தோன்றுகிறது. சட்டம் காக்கும் அமைப்பான அறங்கூற்று மன்றம் இதற்கு மேல் என்னதான் செய்யமுடியும். சட்டமன்றத்தை தீர்மான மன்றமாக்கி, ஆளுநருக்கு அதிகாரத்தை தூக்கிக் கொடுத்து விட்ட அதிமுகவே எழுவர் விடுதலை தாமத்திற்கு முழுக்க முழுக்க காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா! என்றார் பாரதிதாசன். 29 ஆண்டுகளாக அப்பாவிகளாக அடைபட்டுக் கிடக்கும் அந்த சிறைக்கததை; திறக்க அப்படி என்ன யோசனை? இந்நிலையில், ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டதை வரவேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், “பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு கிழமையில் பதில் மனுபதிகை செய்யுமாறு அதிமுக அரசுக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அமைச்சரவை தீர்மானம் மற்றும் மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்சஅறங்கூற்றுமன்றம் “குட்டு” வைத்துள்ளது.
“ஆளுநரிடமிருந்து பதிலை பெற்று அதை அறங்கூற்றுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட அறங்;கூற்றுவர்கள், வழக்கின் விசாரணையை இரு கிழமைகளுக்கு ஒத்திவைத்தனர்.
எனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



