நடுவண் அரசு அறிவித்த- கொரோனா பரவலைத் தடுப்பதற்கு என்பதான- மூன்று கிழமைகள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நிலையில் இருக்கிறோம். தொடரக்கூடாது ஊரடங்கு- தொடருமா ஊரடங்கு- என்ற எதிர்பார்ப்பிலும் அச்சத்திலும் இதற்கான பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற மக்கள் பரபரக்கிறார்கள் 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசு அறிவித்த- கொரோனா பரவலைத் தடுப்பதற்கு என்பதான- மூன்று கிழமைகள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நிலையில் இருக்கிறோம். மனிதன் தவிர்த்து பொருள்களில் தொற்றிய கொரோனா அதிக பட்சம் இரண்டு கிழமைகள் உயர்வாழும் என்பது, கொரோனா குறித்து உலகம் அறிவித்த செய்தி, அதன் அடிப்படையிலேயே மூன்று கிழமையாக இந்திய நாட்டினர் அனைவரும் வீடடங்கி இருந்தால்- வெளியில் பரவிய கொரோனா, தனது உற்பத்தியைப் பெருக்கிட மனித ஊடகம் கிடைக்காத நிலையில், தானாக அழிந்து விடும். இந்த குறிப்பிட்ட நாட்களில், கொரோனாவை வெளிநாடுகளில் இருந்து பெற்று வந்தவர்களையும், வெளிநாடுகளில் இருந்து வந்து கொடுத்து விட்டுப் போனவகையில் கொரோனா பெற்றவர்களையும், கண்டுபிடித்து தனிமைப்படுத்தி, கொரோனா பரவலையும் தடுத்து குணப்படுத்தியும் விடலாம் என்;பதே அரசின் மூன்று கிழமை ஊரடங்கு உத்தரவின் அடிப்படைத் திட்டமாகும். அது அப்படியே நடந்திருந்தால், ஊரடங்கை இந்தக் கிழமை அரசு திட்டவட்டமாக விலக்கிக் கொள்ள முடியும். கொரோனா சீனாவில் உற்பத்தியான நுண்ணுயிரித் தொற்று. இதற்கான தொடக்கம் ஆங்கிலப் புத்தாண்டின் முதல்மாதமான சனவரி. உலக நாடுகள் அனைத்தும் சீனாவுடனான தொடர்பைத் சனவரியிலேயே (பயணிகள் விமானங்களுக்கு தடைவிதித்து) துண்டித்திருந்தால் இந்த ஆண்டில் உலகத்திற்கு கொரோனா அறிமுகம் இல்லாமலே போயிருந்திருக்கும். உலகம் அந்த வேலையைச் செய்யாத போது, இந்தியா மார்ச் கடைசி கிழமையில்- மக்கள் கூட்டம் இல்லாமல் போனதால் அனைத்து பயணிகள் விமானத்திற்கும் தடையை விதித்தது. ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாக, சக்கி வாசுதேவ் சிவராத்திரிக்கும், டெல்லி மாநாட்டிற்கும், சுற்றுலா வகைக்கும், வணிக வகைக்கும், வெளிநாடுகள் கொரோனாவை முன்னிட்டு படிப்பு, பணி ஆகியவற்றுக்காக புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய வகைக்குமாக கொரோனாவை அள்ளி வந்தவர்களை சனவரியிலேயே தடுத்தும், கண்காணித்தும் இருந்தால் இந்த ஆண்டில் இந்தியாவிற்கும் கொரோனா அறிமுகம் இல்லாமலே போயிருந்திருக்கும். தமிழகத்திற்கு இந்த வகையான தடைகள் விதிப்பதற்கு அதிகாரம் இல்லாத நிலையில், சீனாவுக்கு- உலகத்திற்கு மட்டுமில்லாமல் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் வருகின்றவர்களை தடை படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான நிலையில் தமிழக அரசு தனக்கு இருக்கிற தகுதிக்கும், அதிகாரத்திற்கும் மேலாகவே கொரோனாவை இந்த இரண்டு கிழமைகளில் ஊரடங்கின் நோக்கம் சிதையாமல் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களின் தொடர்புகளைத் தமிழகத்தோடு துண்டித்தே வைத்திருந்தால், தமிழகத்தில் தாராளமாக ஊரடங்கை தளர்த்தி எதிர்காலத்திலும் சிறப்பாக கொரோனாவை எதிர்கொள்ள முடியும். நடுவண் அரசு சில நிபந்தனைகளை நிறைவேற்றியும், தேவையான உதவிகளை செய்தும் தந்தால். ஆனால் இந்த ஊரடங்கை அறிவித்துள்ளது நடுவண் அரசு. நடுவண் அரசு இதுவரை ஊரடங்கை தொடர்வது குறித்தோ, தளர்த்துவது குறித்தோ எந்தச் செய்தியும் இதுவரைத் தெரிவிக்கவில்லை. ஆனால் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ள கவலையிலிருந்து நடுவண் அரசு மேலும் ஊரடங்கை தொடரக் கூடும் என்கிற செய்தி உள்ளீடாகப் பார்க்கப்படுகிறது. 21 நாட்கள் ஊரடங்கு வரும் 14ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை விலக்கிக்கொள்வது குறித்து ஆலோசிக்க இன்று அமைச்சரவை கூடியது. அந்தக் கூட்டத்தில் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு:- ஊரடங்கின் மூன்றாவது கிழமை என்பது, ஊரடங்கை விலக்கிக்கொள்வது குறித்த முடிவை விவாதிக்க வேண்டிய முக்கியமான தருணம். இந்த நேரத்தில் சிரமங்கள் தொடர்ந்தாலும் மக்கள் அரசின் சில முடிவுகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும். இதுவரை இந்தியர்கள் அளித்த ஒத்துழைப்பு என்பது தாய்நாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள பக்தியை வெளிப்படுத்துகிறது. இந்தக் கொரோனா விளைவுகளிலிருந்து உலக சமுதாயம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் இந்த நுண்ணுயிரிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி தற்போது நிச்சயமற்றதாக இருக்கலாம், ஆனால் இறுதியில் நாம் வெற்றி பெறுவோம். உலகெங்கிலும் உள்ள மக்களின் உடல்நலம் மற்றும் செல்வத்திற்கான செலவுகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாதிப்புகள் நீங்கிய பின் நாம் காணப்போகும், சிறந்த நாளுக்காக இன்னும் சிறிது காலம் சிரமத்துடன் வாழ்வோம். என்று தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14க்கு பின்பும் ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து உள்ளன என நடுவண் அரசு தகவல் தெரிவித்து உள்ளது. ஆனாலும் இதுபற்றி நடுவண் அரசு பரிசீலனை செய்து வருகிறது என கூறப்படுகிறது. இந்த நிலையில் மோடி அவர்களுக்கு கமல் அவர்கள் எழுதிய கடிதம்: ஊரடங்கிற்கான பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருப்பது மக்களே. மக்களிடம் தெரிவிக்காமலே நான்கு மணிநேர இடைவெளியில் இந்த ஊரடங்கு நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது. ஊரடங்கைத் தொடர மக்கள் அனுமதி அல்லது மக்களுக்கு முழுமையான நிவரணம் என்பதாக இருக்க வேண்டும் என்பதாக தெரிவத்துள்ளார். வீட்டில் உணவு செய்வதற்குக்கூட எண்ணெய் இல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழைகள் எந்த பால்கனியில் வந்து கைதட்டி விளக்கேற்ற முடியும் எனக் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தலைமை அமைச்சர் மோடிக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். ஊரடங்கு என்ற அறிவிப்பை கேட்ட பிறகு, ஒரு நிமிடம் திகைப்பிற்குள்ளானாலும். தலைமைஅமைச்சர் என்கின்ற முறையில் நீங்கள் சொல்வது சரியானதாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையில், உங்களை நம்பலாம் என்கின்ற முடிவிற்கு வந்தேன். பணமதிப்பிழப்பின் போதும்கூட நான் உங்களை நம்பலாம் என்றுதான் முடிவெடுத்தேன். ஆனால், காலம் எனது முடிவு தவறென்று உணர்த்தியது. இப்பேரிடர் காலத்தில் உங்கள் வழிகாட்டுதலின் படி செல்வதற்கு தயாராக உள்ளேன். இந்தத் தேசமே நம்பிக்கையுடன் எழுந்து நின்று தலைமைஅமைச்சர் அலுவலகம் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக உள்ளது. இந்த நாட்டிற்காகத் தன்னலமின்றி சேவை செய்து கொண்டிருக்கும் நலங்குத்துறை ஊழியர்களுக்கும், மருத்துவர்களுக்கும், நாம் நமது நன்றியினை கைதட்டல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னவுடன் உங்கள் கருத்திற்கு எதிர்கருத்து கொண்டோர்கூட கைதட்டி உற்சாகமூட்டினர் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களுடைய ஆணைக்கும் விருப்பத்திற்கும் இணங்கி நடக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை உங்களுக்கு அடிபணிகின்றோம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. சரியாகத் திட்டமிடப்படாத, இந்த ஊரடங்கு அனைவரின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் ஆபத்தை நோக்கி செலுத்துகிறது. செல்வந்தர்களைக் குடும்பத்தினருடன் இரவு நேர கேளிக்கைகளை காண அழைக்கிறீர்கள், மறுபுறம் ஏழைகளை அவமானமாக உணரும் ஒரு சூழலில் தள்ளுகிறீர்கள். உங்களுடைய உலகம் எண்ணைய் விளக்குகளைத் தங்கள் பால்கனிகளில் ஏந்திக்கொண்டிருக்கின்ற பொழுது, ஏழைகள் தங்கள் வீட்டில் உணவு செய்வதற்குக்கூட எண்ணெய் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியாக நடந்த மக்களுடனான உங்கள் உரையாடல்களும் மக்களை அமைதிப்படுத்தும் நோக்கத்தில் அமைந்தது. அமைதியாக இருப்பதைவிட மக்களுக்கு மிக முதன்மையான தேவைகள் இருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற மனநல யுக்திகள் வளர்ந்த நாடுகளில் வாழும் பெரும் செல்வந்தர்கள் தங்கள் பால்கனியில் வந்து நின்று கைதட்டி தங்களுக்கு இருக்கும் கவலைகளை மறப்பதற்கு வேண்டுமானால் பயன்படும். ஆனால், தாங்கள் வசிப்பதற்கு ஒரு சிறு ஓலைக்குடிசைகூட இல்லாத ஏழை எந்த பால்கனியில் வந்து கைதட்டி விளக்கேற்ற முடியும்? தனது உழைப்பினாலும் வியர்வையினாலும் இந்த நாட்டையும் நாட்டு மக்கள் அனைவரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக ஒரு பெரும் அடித்தளமாக இருக்கும், அடித்தட்டு மக்களை ஒதுக்கி வைத்து, வெறும் பால்கனிவாழ் மக்களின் பால்கனி அரசாகத் தாங்கள் தங்கள் அரசை நிர்வகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அடித்தளத்தை அசைத்துப் பார்த்தால், மேல்தட்டு சிதறிவிடும் என்பதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. இயல்அறிவும் (சயின்ஸ்) அதை ஒத்துக்கொள்ளும். மேல்தட்டில் இருப்பவர்கள் அடித்தட்டில் இருப்பவர்கள் மீது திணித்த முதல் தொற்று நோயும் நெருக்கடியும் இதுதான். அதிலும் மிக முதன்மையாகத் தாங்கள் அடித்தட்டு மக்களைக் காப்பாற்றுவதைத் தவிர்த்து, மற்ற அனைத்து விசயங்களிலும் கவனம் செலுத்துவது போலவே இருக்கிறது. கோடிக்கணக்கான அன்றாடக்கூலிகள் ஏதேனும் ஒரு சிறு வெளிச்சமாவது தங்கள் வாழ்வில் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கையில் நன்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் மேல்தட்டு நடுத்தட்டு மக்களின் கோட்டைகளைக் காப்பாற்றுவதை மட்டும் நமது குறிக்கோளாய் வைத்திருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு மனிதனும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்பதுதான். அதைதான் நீங்கள் செய்திட வேண்டும் என நான் உங்களிடமும் பரிந்துரை செய்கின்றேன். கோவிட் 19 தொடந்து பல பேரை தொற்றிப் பரவும் என்றாலும், நாம் பசி, சோர்வு, இழப்பு எனும் பெரும் பிணிகளைப் பெற்றெடுக்கும் கருவறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பசி, சோர்வு, இழப்பு இன்று பார்ப்பதற்கு சிறிதாகத் தெரிந்தாலும் கோவிட்19 விட மிகக்கொடிய உயிர்கொல்லியாக இருக்கும். கருத்துப் பரப்புதல் யுக்திகளின் மூலமாக மக்களை உற்சாகத்தில் மட்டுமே வைத்திருக்க முயலும் உங்கள் கவனமும் நோக்கமும், மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக செய்ய வேண்டிய விசயங்களில் கவனம் செலுத்தமால் புறந்தள்ளுகிறது. ஜனவரி 30, இந்தியா தனது முதல் கொரோனா நோயாளி குறித்த விவரங்களை வெளியிட்டது. இத்தாலியில் என்ன நடந்தது என்பதைக் கண்கூடாகப் பார்த்த பின்பும், நாம் பாடம் கற்கவில்லை. திடீரென அறியாமை உறக்கத்திலிருந்து கண் விழித்தபோது, நிலைமையின் தீவிரம் உணர்ந்து, நான்கே மணி நேர கால அவகாசம் கொடுத்து 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசத்தை முடக்கினோம். சிக்கல்கள் தீவிரம் அடையும் முன்பே தீர்வுகளைத் தயார் நிலையில் வைப்பவர்கள்தான் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள். மன்னிக்கவும். ஆனால், இந்த முறை உங்கள் தொலைநோக்குத் தோற்றுவிட்டது. நீண்ட காலத்திற்கு மக்களிடையே மிகப்பெரும் பாதிப்பேற்படுத்தக் கூடிய இந்தக் கொரோனா, நம்மைத் தீண்டியது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. இப்பேரிடர் நம் அனைவரையும் இணைக்க வேண்டுமே தவிர, எந்தப் பக்கத்தில் யார் பிரிந்து நிற்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரமல்ல. நாங்கள் கடுங்கோபத்தில் இருக்கிறோம், இருந்தாலும் உங்களுடன் இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



