தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று செவ்வாய்க் கிழமை 690ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று செவ்வாய்க் கிழமை 690ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சற்றே ஆறுதல் அடையக் கூடிய வகையில் 19 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நலம்பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளதாகவும் தமிழக நலங்குத்த்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். நேற்று வரை 8 பேர் நலம்பெற்றிருந்த நிலையில் இன்று புதிதாக 11 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தில் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் தமிழகத்தில் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் அரசு மிகத் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6-ல் இருந்து 7-ஆக இன்று அதிகரித்துள்ளது. சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்த 64 வயது பெண் ஒருவர் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏற்கனவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்மணி தொடர்பான பயண வரலாறு விசாரனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 69 நபர்களில் 63 பேர் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நபர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் வெளி மாநில பயண வரலாறு உடையவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இருவர் பயண வரலாறு மற்றும் தொடர்புகள் பற்றி கண்டறியப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இதனிடையே கொரோனா தொற்று சோதனையை பொறுத்தவரை தமிழகத்தில் தான் அதிகளவு நடத்தப்பட்டுள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி மொத்தம் 5,305 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், 34 மாவட்டங்களில் 15 லட்சம் வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பீலா ராஜேஷ் கூறினார். மேலும் தமிழகம் முழுவதும் 30,360 ஊழியர்கள் கண்காணிப்பு உள்ளிட்ட களப்பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் 253 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசு மருத்துவர்கள் மற்றும் ஆய்வகத் தொழில் நுட்பர்கள் இன்று காணொளி மூலம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது பற்றி சில வழிகாட்டுதல் விளக்கப்பட்டதாக கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



