நடுவண் அரசு அறிவித்த- கொரோனா பரவலைத் தடுப்பதற்கு என்பதான- மூன்று கிழமைகள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நிலையில் இருக்கிறோம். தொடரக்கூடாது ஊரடங்கு- தொடருமா ஊரடங்கு- என்ற எதிர்பார்ப்பிலும் அச்சத்திலும் இதற்கான பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற மக்கள் பரபரக்கிறார்கள். இதற்கிடையே ஊரடங்கைத் தொடர்ந்திருக்கவே கூடாது என்கிற நிலையில், ஊரடங்கை மேலும் தொடரவேண்டாம் என்கிற பார்வைகள் விரிந்து வருகின்றன. 26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை என்று மதுவுக்கு எதிராகப் போராடும் நந்தினி விளக்கம் அளித்து, ஏப்ரல் 14க்குப் பிறகும் ஊரடங்கைத் தொடரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இந்தக் கிழமையுனட ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது இன்னும் தொடருமா என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதே தவறு என்பதான பார்வைகள் விரிந்து வருகின்றன. இதன் பின்னணியில் அறியாமை அல்லது அரசியல் இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டு விவாதம் நேற்று கமல் இன்று மதுவுக்கு எதிராகப் போராடி வரும் மதுரை நந்தினி ஆகியோரால் முன்னெடுக்கப் படுகிறது. நந்தினி தரப்பு விவாதமாவது:- இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா என்பது சமூகப் பரவலாக மாறவில்லை. எனவேதான் இங்கே ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை மட்டும் தனிமைப்படுத்திக் கண்காணித்தால் போதுமானது. இந்தக் கருத்தை சும்மா, ஏனோதானோவென்று சொல்லவில்லை. உலக நாடுகளின் கரோனா தொற்று பற்றிய புள்ளிவிவரங்களையும், ஆய்வறிக்கைகளையும் அடிப்படையாக வைத்தே இதைச் சொல்கிறோம். உலக நலங்கு நிறுவனம், நடுவண் நலங்குத் துறை, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அனைத்துமே இங்கே கொரோனா சமூகப் பரவல் நடக்கவில்லை என்றே அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். சீனா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் சமூகப்பரவல் ஏற்பட அங்குள்ள குளிர்ச்சூழலே காரணம். இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கடும் வெயில் அடிப்பதே கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் காரணம். ஆனால், அது ஊரடங்கு உத்தரவால் விளைந்த சாதனை என்று பீற்றிக் கொள்வதில் பொருள் இருக்க முடியாது. நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் கிடக்கிறது. பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் ஆட்சியாளர்களை நோக்கித் திரும்பாமல் இருக்க சாதகமாக்கிக் கொள்ளப்பட்ட சிக்கலே கொரோனா பீதி. இன்று பொருளாதாரத்தைவிட மக்களின் உயிர் தான் முதன்மை என்று சொல்கிற அதே அரசுதான், மக்களின் உயிரைவிட வருமானம்தான் முதன்மை என்று டாஸ்மாக் கடை என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறோம். உலகில் உள்ள அத்தனை செல்வங்களையும் விட ஒரு தனி மனிதனின் உயிர்தான் முதன்மை என்பதுதான் எங்களது கோட்பாடும். ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் வேலை பார்த்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போக முடியாமல் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு முதல் கிழமையில் மட்டும் 5 குழந்தைகள் உள்பட மொத்தம் 22 தொழிலாளர்கள் பசியால் இறந்திருக்கிறார்கள். இந்த இறப்பு அதிகரித்துவிடக்கூடாது என்பதே எங்கள் கருத்து. என்கிறார் நந்தினி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



