ஆற்றாமையில் சமூக ஆர்வலர்கள்- கையறு நிலையில் மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள்- விடாப்பிடியாய் இருபத்தியொன்பது நாட்களாக களத்தில் இருக்கும் வடமாநில உழவர்கள்- உழவர்கள் போராட்டத்தை முறியடிக்க விபீசணர்களைத் தேடி அலையும் ஒன்றிய பாஜக அரசு. 09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கூடாது என்று தெரிவிக்கும் சட்டத்துக்கு ஆதரவான கடிதத்தை, பாஜக அரசுக்கு சாதகமான உழவர் சங்கங்களிடம் இருந்து பெறும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் இந்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர். இந்தப் பாட்டில், அரசின் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதன் அண்டை மாநில எல்லைகளில் குடும்பம் குடும்பமாக களத்தில் இறங்கி முகாமிட்டுள்ள உழவர் குடும்பங்களின் போராட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) 29ஆம் நாளை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பாத்தை சேர்ந்த- சிலஉழவர்கள் குழுவுடன், நரேந்திர சிங் தோமர் வேளாண்துறை அமைச்சகம் அமைந்துள்ள ‘வேளாண் மாளிகையில்’ இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உழவர்களிடம் பேசிய பிறகு அவர்கள் அதன் நன்மைகளை புரிந்து கொண்டுள்ளனர். இந்தச் சட்டங்களை திரும்பப்பெறக்கூடாது என்று அவர்கள் கடிதம் கொடுத்துள்ளனர், என்று கூறினார். அந்த கடிதத்தையும் அவர் செய்தியாளர்களிடம் காட்டி அரசின் சட்டமியற்றல் நடவடிக்கையை நியாயப்படுத்தினார் தோமர். இந்தப் பாட்டில் எவ்வித அழுத்தத்துக்கும் அடிபணியக்கூடாது என்றும் கடிதம் கொடுத்த உழவர்கள் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாக தோமர் குறிப்பிட்டார். இராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள், குடியரசு தலைவரை சந்தித்து மனு கொடுத்தது பற்றி கேட்டதற்கு, இராகுல் காந்தி பேசுவதை அவரது கட்சியினரே தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்களின் கையெழுத்துகளை பெற்றதாக இராகுல் காந்தி கூறுகிறார். ஆனால், இன்று என்னை சந்தித்த உழவர்களில் ஒருவர் கூட தங்களை இராகுல் குழுவினர் சந்திக்க வந்ததாக தெரிவிக்கவில்லை, என்று தோமர் பதிலளித்தார். இதன் மூலம் உழவர்கள் கருப்பு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வலியுறுத்திவரும் கோரிக்கையை ஏற்கும் நிலையில் அரசு இல்லை என்பது தெளிவாகிறது. டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உழவர்களுக்கு இரு முறை கடிதம் அனுப்பியிருக்கும் இந்திய வேளாண் துறை அமைச்சர், சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினால், அதில் நியாயம் இருக்கும்பட்சத்தில் திருத்தம் செய்ய அரசு தயாராக இருப்பதாக அந்த கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல, இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா உழவர்கள் சங்கங்களின் பேராளர்கள் சிலரிடம் கருத்துரை அற்றியபோதும் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்தப் பாட்டில் குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்தை இன்றைய சந்திப்புடன் சேர்த்து இரண்டு முறை எதிர்கட்சியினர் சந்தித்துள்ளனர். இன்றைய சந்திப்பின்போது உழவர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்கள் இருப்பதாகக் கூறி 2 கோடி பேர் கையெழுத்திட்ட மனுவை காங்கிரஸ் தலைவர்கள் அளித்துள்ளனர். இருந்தபோதும் அவற்றின் மீது குடியரசு தலைவர் அலுவலகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. வாஜ்பாயி பிறந்த நாளான வெள்ளிக்கிழமை உழவர்களுடன் மோடி ஆற்றவுள்ள காணொளி உரையின்போது, அவர் வெளிப்படுத்தும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்து போராட்டங்களை தீவிரப்படுத்தும் வாய்ப்புகளை உழவர்கள் பேராளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



