Show all

‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமிட்ட அமுல்யாவைக் கொல்பவர்களுக்கு 10லட்சம் ரூபாய் வெகுமதியளிக்கப்படும்! ஸ்ரீராம் சேனா அறிவிப்பு

மாணவி அமுல்யாவைக் கொல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதியளிக்கப்படும் என ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவரான சஞ்சீவ் மராதி கூறியிருக்கிறார். அத்தோடு, காவல்துறை அமுல்யாவை வெளிவர விடக்கூடாது என்றும், வெளியே விட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் பேசி இருக்கிறார்.

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணியில் அமுல்யா லியோனா என்னும் பதினெட்டு அகவை மாணவி, பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டதற்காக தேச துரோகச் சட்டத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளார். 

பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு முன் குடியுரிமைத் திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. அதில் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியின் தலைவர் அசதுத்தீன் உவைஸியும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்தில் கல்லூரி மாணவி அமுல்யா பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. உவைஸி அந்த மேடையிலேயே மாணவியின் நடவடிக்கையைக் கண்டித்துப் பேசியதாக தெரியவருகிறது.

மாணவி அமுல்யாவின் பேச்சுக்காக பெங்களூரு காவல்துறை, தேச துரோகச் சட்டம் மேலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. அமுல்யாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஹிந்துத்துவா அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அவருடைய வீட்டைத் தாக்கியதோடு, அவரின் தந்தை வாஜியை ‘பாரத் மாதா கீ ஜெய்’ சொல்ல வைத்தனர். தன் மகள் செய்தது தவறு என்றும் அவரை ஆதரிக்கப் போவதில்லை என்றும் வாஜி கூறினார். அது காணொளியாக புலனத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

இதனிடையே, அமுல்யாவின் பேச்சு தவறாக விளங்கப்பட்டு விட்டதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பாதியில் பேச்சை நிறுத்தியதால்தான் அது சிக்கலுக்கு உரியதாய் ஆகிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். நாளது 06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (18.02.2020) அமுல்யா தனது முகநூல் பக்கத்தில், எந்த நாடாக இருந்தாலும் எல்லா நாடுகளும் நலமாக இருக்க வேண்டும் என்றும் இந்தியா, வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான்  என அனைத்து நாடுகளும் வாழ்க எனும் பொருளிலும் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமுல்யாவை ஆதரித்து பதாகை பிடித்ததற்காக அவரின் தோழி ஆர்திரா நாராயணன் என்பவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். அமுல்யாவுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்வினையாக அவர் ஒரு அட்டையில் ‘முஸ்லிம், தலித், காஷ்மிரி, பகுஜன், ஆதிவாசி, மாற்றுப் பாலினத்தார் விடுதலை’ என எழுதி எடுத்துச் சென்றுள்ளார். இந்தப் பின்னணியில், மத, இன ரீதியில் அவர் பகைமையை ஏற்படுத்துவதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது மாணவி அமுல்யாவைக் கொல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதியளிக்கப்படும் என ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவரான சஞ்சீவ் மராதி கூறியிருக்கிறார். அத்தோடு, காவல்துறை அமுல்யாவை வெளிவர விடக்கூடாது என்றும், வெளியே விட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் பேசி இருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.