தமிழகத்தில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எந்த மாநில மாணவரும் சேர்ந்து படிக்க வழிவகை உள்ளதே கேள்விக்குள்ளாக்கப் பட்டு வரும் நிலையில், கேரளாவில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் வகையில் நடைமுறைகள் இருந்தது பறிபோக, உச்சஅறங்கூற்றுமன்றம் வெளியிட்ட புதிய உத்தரவுப்படி தற்போது பிற மாநில மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளாவில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் பிற மாநில மாணவர்களையும் அனுமதிக்க உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்து கேரளாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர். அதிகபட்சமாக ராஜஸ்தானில் இருந்து 1900பேர் விண்ணப்பித்துள்ளனர். மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 7300 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்தும் ஆயிரம் பேர்கள்வரை இயங்கலை மூலம் விண்ணப்பித்துள்ளனர். பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு எந்த பிரிவின் அடிப்படையில் மருத்துவ கல்லூரி இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், எத்தனை விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது போன்ற விபரங்களை உச்சஅறங்கூற்றுமன்றம் தெளிவுபடுத்தாமல் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நுழைவு தேர்வு ஆணையரகம் கருதுகிறது. கேரளாவில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரிகளில் கேரளாவை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை ஏற்க உச்சஅறங்கூற்றுமன்றம் மறுத்துவிட்டதால் மேல்முறையீடு வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. பக்கத்து இலைக்குப் பாயாசம் என்ற அடிப்படையில், கேரளமாநில மருத்துவக் கல்வி உரிமை பாதுகாக்கப் படவேண்டும் என்ற நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியது தமிழக மக்களின் கடமையாகும். தனிமனிதனின் அடிப்படை உரிமையான கல்வி மாநிலப் பட்டியலிலேயே இடம் பெற வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,167.
வெள்ளத்தால் போகாது வெந்தணலால்
வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகஅரிது காவலோ
மிகஎளிது கல்வி என்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம்
பொருள்தேடி உழல்வதேனோ!
என்று, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, மன்னர் ஆட்சி காலத்திலேயே, பாண்டிய மன்னன் கல்வியின் அடிப்படைத் தேவை குறித்து பாடி, கல்வியை தனிமனிதனின் அடிப்படை உரிமையாக நிறுவிய நிலையில், மக்களாட்சி காலத்தில் கிடைப்பவர்கள் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிற ஆதிக்கக் கோட்பாட்டை நிறுவ முயலாமல், உச்சஅறங்கூற்றுமன்றம் தாமாக முன்வந்து, சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் பிற மாநில மாணவர்களையும் அனுமதிக்க இட்ட உத்தரவை உச்சஅறங்கூற்றுமன்றம் மறுசீராய்வு செய்ய வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



