02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனக்கு கிடைத்த அனைத்து நிதியுதவியையும் கேரளத்தில் மீன் விற்றுக் கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவி ஹனான் ஹமீது அளிப்பதாக அறிவித்துள்ளார். திருச்சூரைச் சேர்ந்தவர் ஹனான் ஹமீது. இவர் தோடுபுழாவிலுள்ள அல் அசார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு வேதியியல் படித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பகுதி நேரமாக மீன் விற்கும் தொழிலையும் செய்து வந்தார். இவர் எர்ணாகுளத்தில் உள்ள கோத்தமங்கலத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் கல்லூரி சீருடையில் இவர் மீன் விற்றதை விளம்பரம் என்று கூறி சிலர் சமூகவலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்தனர். இதையடுத்து அவரது வங்கிக் கணக்குக்கு ஏராளமான 500 ரூபாய் தாள்களும், 2000 ரூபாய் அனுதாப நன்கொடைகளாக சேர்ந்தன. அவர்தம் தாய் மண்ணான கேரளத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. மொத்தம் 14 மாவட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டு உதவியை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்தன. கடும் வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் மற்ற மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் கேரளத்தில் மீன் விற்றுக் கொண்டே படித்துக் கொண்டிருக்கும் ஹனான் ஹமீது ரூ.1.5 லட்சம் நிதியுதவியை அளிப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹனான் ஹமீது கூறுகையில் நான் சிரமத்தில் இருந்தபோது என் மண்ணின் மக்கள் 500 ரூபாய் தாள்களையும் 2000 ரூபாய் தாள்களையும் வாரி வழங்கினர். தற்போது அந்த மக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். எனவே அவர்கள் எனக்கு அளித்த நிதியுதவி முழுவதையும் சுமார் 1.5 லட்சத்தையும் அவர்களுக்கே திருப்பி அளிக்கிறேன். முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் உள்ள செல்பேசியில் இணையதள வசதி தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. வீட்டை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துகொண்டுள்ளதால் என்னால் வெளியேறவும் முடியாத நிலை உள்ளது. இந்தத் தொகையை பணமாகவோ அல்லது காசோலையாகவோ முதல்வரை இன்னும் இரு நாட்களில் சந்தித்து அளித்து விடுவேன் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,883.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



