Show all

பாஜகவின் அடாவடிக்கு பதிலடி! “நாடுமுழுவதற்குமானமொழிஹிந்தி” அமித்சா கீச்சுவுக்கு எதிராக கர்நாடகாவில் கண்டனப் பேரணி

ஹிந்திதான், நாடுமுழுவதற்குமானமொழி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் கன்னடத்தை போல ஹிந்தியும் ஒரு மொழிதான். ஹிந்தி மட்டுமே தேசிய மொழிபோல, பொய்களைப் பரப்புவதன் மூலம், எந்தவொரு மொழியையும் வீழ்த்திவிட முடியாது. இவ்வாறு “நாடுமுழுவதற்குமானமொழிஹிந்தி” என்ற அமித்சா கீச்சுவுக்கு, சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்து கீச்சிட்டுள்ளார். கர்நாடகம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்பட்டது. கன்னட அமைப்பினர் இந்தக் கண்டனப் பேரணியை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் பெங்களூரில் வசிக்கும் தமிழர்களும், தெலுங்கர்களும் கலந்து கொண்டது குறிப்பிட்டு பாராட்டத்தகுந்தது.

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. பாஜகவுக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்சா, ஹிந்தி தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் போராட்டம் வெடித்துள்ளது. “ஹிந்திதான், நாட்டு மக்களை இணைக்கும், மொழி” என்று அமித்சா தெரிவித்த கருத்து கருநாடக மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. கர்நாடக மக்களின் சார்பாக கன்னட அமைப்பினர் இன்று ஊர்வலமாக நகரின் நடுப்பகுதியில் உள்ள நகர்மாளிகை பகுதிக்கு வந்தனர். ஹிந்திக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும், அவர்கள் முழக்கமிட்டனர். 

இதுபற்றி போராட்டக்குழுவைச் சேர்ந்த நஞ்சப்பா என்பவர் கூறுகையில், ‘தென் மாநிலங்களைப் பொறுத்த அளவில், ஹிந்தி என்பது அன்னிய மொழி. இங்கே அதிகம் பேருக்கு அந்த மொழி அறிமுகம் இல்லை. வெளிநாட்டு மொழி போலத்தான் ஹிந்தி எங்களுக்கு. அப்படியிருக்கும்போது நாங்கள் எதற்காக ஹிந்தியை கற்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார். ஹிந்தியை திணிக்கும் முயற்சியில் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறினர்.

ஹிந்திக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதிப்பது இது முதல் முறை கிடையாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களில் எழுதப்பட்டிருந்த ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த பெயர்பலகைகளை தார் பூசி அழித்து போராட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,275.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.