Show all

பாஜகவின் அடுத்த அடாவடி! அமித்சா கீச்சுப்பதிவு: நாடு முழுவதற்குமான மொழி ஹிந்தி

அமித்சாவின், “இந்தியாவின்ஒரேமொழிஹிந்தி” என்ற கீச்சுப் பதிவுக்கு எதிராக இணையம் சூடாகி வருகிறது. ஒரு இணைய இதழ் கருத்துக் கணிப்பில், அமித்சாவின் இந்தக் கீச்சு அபத்தமானது என்ற கருத்துக்கு ஆதரவாக தொன்னூறு விழுக்காட்டினர் வாக்கு அளித்து இருக்கின்றார்கள்.

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா விடுதலை பெற்ற இரண்டாவது ஆண்டில், இதே நாளில் அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசு, ஹிந்தியை அலுவல் மொழியாக அறிவித்தது. அப்போது, ஆண்டுதோறும் இதே நாளில் ஹிந்தி மொழி நாளாக கொண்டாடுவது என்றும், தொடர்ந்து ஹிந்தியை வளர்ப்பது என்றும், பதினைந்து ஆண்டுகளுக்குள், ஆங்கிலத்தை முற்றாக அப்புறப்படுத்தி விட்டு, ஆங்கிலத்தை இந்தியாவில் நிருவாகத்தளத்தில் இல்லாமல் செய்து விடுவது என்று முடிவு செய்தது காங்கிரஸ் அரசு. 

ஆனால் ஆங்கிலம் அப்புறப் படுத்தப் பட்ட அந்த இடத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு இடம் தருவது குறித்து எந்தக் கருத்தும் இல்லாமல், ஹிந்தி மொழியை முன்னெடுப்பது என்று முடிவு செய்தது. காங்கிரஸ் திட்டமிட்டிருந்தபடி பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலப் பயன்பாட்டை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி நடைபெற்றது. 

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வலுப்பெற்றிருந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி. கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. உலக வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பல உயிர்த் தியாகங்களோடு முன்னெடுக்கப் பட்டது. 

இதன் விளைவாக, கொண்டு வரவிருந்த சட்ட முன்வரைவு கைவிடப்பட்டதுடன், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அலுவல் மொழிகள் என்ற சட்டமும் திருத்தப்பட்டு இந்தியாவின் அதிகம் புழக்த்தில் உள்ள தமிழ் உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகள், இந்தியாவின் அலுவல் மொழிகள் என்று சட்டப்பிரிவு எட்டாவது அட்டவணையில் பட்டியல் இடப்பட்டது.

அன்றிலிருந்து, ‘ஹிந்திமொழி நாளை’ இந்திய ஒன்றிய அரசு கொண்டாடுவதை நிறுத்தியிருக்க வேண்டும். அல்லது அட்டவணை எட்டில் பட்டியிலிடப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியாக மொழிநாள் அறிவித்து கொண்டாட்டத்தை முன்னெடுத்து வந்திருக்க வேண்டும். 

ஆனால், ஏமாற்றுத்தனமாக ஹிந்தி நாளை தொடர்ந்து இந்திய அரசில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்தி வெறித்தனமிக்க தலைவர்கள் தொடர்ந்து கொண்டாடி வருவதையும், அன்றைய நாளில், ஹிந்தியை இந்தியாவின் ஒரே மொழி என்று பேசி, எதிர்ப்பு இருக்கிறதா என நூல் விட்டுப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் ஹிந்தி வெறித்தனமிக்க வடஇந்தியத் தலைவர்கள்.

இந்த வகையாக, இன்று, இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா ஹிந்தியாவின் ஒரே மொழி ஹிந்தி என்று, கீச்சு பதிவு வெளியிட்டு, இந்தி எதிர்ப்பு மாநிலங்களில் சர்ச்சை கிளப்புகிறதா வென்று சோதனை முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

அவர் கீச்சுவில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முதன்மைத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் ஹிந்தி மொழியால்தான் முடியும். இன்று ஹிந்திநாளை முன்னிட்டு நாட்டின் அனைத்துக் குடிமக்களிடமும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழி கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த ஹிந்தி நாளில் செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்து இந்திய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,275.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.