அரசாங்கத்திற்கு ஏதேனும் கண்ணியம் இருந்தால், ஹிந்தி அடாவடியில் ஈடுபட்ட ஆயுஷ் அதிகாரியை மாற்றிவிட்டு உடனடியாக அந்தப் பணியிடத்துக்கு தமிழகத்தை சேர்ந்த அரசு ஊழியரை நியமிக்க வேண்டும் என்று சசிதரூர் வலியுறுத்தியுள்ளார். 08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி தெரியாத இயற்கை மருத்துவர்களை குறிப்பாக தமிழ் மருத்துவர்களை வெளியேற சொன்ன ஆயுஷ் அதிகாரியை மாற்றி விட்டு உடனடியாக அந்த பணியிடத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார் ஓகம் மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சியில் தமிழகத்தை சேர்ந்த 37 மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி வகுப்பின்போது ஆயுஷ் அமைச்சக செயலாளரான வைத்யா ராஜேஷ் கொடேஜா ஹிந்தியில் பேசியுள்ளார். அப்போது குறுக்கிட்ட தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரிக்கை வைத்தனர். மற்ற மாநில மருத்துவர்கள் பலரும் அந்தக் கோரிக்கையை ஆமோதித்தனர். ஆனால், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும் ஹிந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் ராஜேஷ் கொடேஜா தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஏராளமானோர் நடுவண் பாஜக அரசின் இந்த ஹிந்தி திணிப்பு முறைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், நடுவண் பாஜக அரசு, உடனடியாக அந்தச் செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழர்களிடம் தனது ஹிந்தியை புரிந்து கொள்ள முடியாவிட்டால் இயங்கலை பயிற்சி வகுப்பில் இருந்து வெளியேறும்படி ஆயுஷ் அமைச்சக செயலாளர் கூறியது அசாதாரணமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்திற்கு ஏதேனும் கண்ணியம் இருந்தால், அவரை மாற்றிவிட்டு உடனடியாக அந்த பணியிடத்துக்கு தமிழகத்தை சேர்ந்த அரசு ஊழியரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தற்போது ஆட்சியில் இருக்கும் குழு இந்தியாவின் கடின முயற்சியால் வென்றெடுக்கப்பட்ட ஒற்றுமையை அழிக்க உறுதியாக உள்ளதா என்றும் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



