ஹிந்தி திரையுலகம், போதைப் பொருள் மாபியாக்களின் வலையில் சிக்குண்டதாக, துணிச்சல் பெண்- ஹிந்தி திரையுலக நடிகை கங்கணா ரணாவத் வைத்தக் குற்றசாட்டு- எப்படியெல்லாம் சந்து பொந்து இண்டு இடுக்குளில் நுழைந்து காணமல் போனது என்கிற கதை இது. 24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒட்டுமொத்த வகுப்பறையும் ஒருவருக்கு எதிராக திரண்டு பயமுறுத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் ஹிந்தி திரையுலகம் எனக்கு எதிராக அணி திரண்டு செயல்படுகிறது. அவர்களுக்கு வெட்கமே இல்லை. இப்படிப்பட்டவர்களிடம் வேலை பார்க்க எனக்கு விருப்பமில்லை. இதை அவர்கள் முகத்துக்கு நேராகவே நான் சொல்கிறேன். சிலர் என் தாத்தா அளவுக்கு அகவையுள்ளவர்கள். ஆனால் பாலியல் சீண்டல், குடும்ப ஆதிக்கம், சம்பள பாகுபாடு என பல்வேறு குறைகள் அவர்களிடம் உள்ளன. இனியும் நான் அமைதியாக இருக்க போவதில்லை. எல்லோரையும் வெளிப்படையாக அடையாளம் காட்டப் போகிறேன். என்னை அடக்கி ஒடுக்குவதன் மூலம் அவர்கள் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கி இருக்கின்றனர். ஜான்சிராணி போன்ற மாபெரும் வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படத்தை பற்றி பேச இவர்கள் ஏன் தயங்குகின்றனர்? ஜான்சிராணி என் சொந்தக்காரரா? தேசத்தில் அவர் அனைவருக்கும் சொந்தக்காரரே. நான் ஹிந்தி திரையுலகில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து பேசுகிறேன் என்பதாலேயே என்னை எல்லோரும் அமுக்கப் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் பேசி அசத்தியிருந்தவர்தான் துணிச்சல் பெண் கங்கனா ரணாவத். தற்போது அவர் தூக்கி வீசிய கணை- ஹிந்தித் திரையுலகில் போதைப் பொருள் விற்பனையாளர்களின் ஆதிக்கம் குறித்து அவர் வெளியிட்ட ஒரு அதிரடி. ஹிந்தித் திரையுலகில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் கங்கனா ரணாவத், தனக்கு காவல்துறை பாதுகாப்பு கிடைத்தால் ஹிந்தி திரையுலகிற்கும் போதை மருந்து மாபியாவுக்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்த முடியும் என்று கீச்சுவில் எழுதினார். கங்கனா கடந்த சில நாட்களாக தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார். மேலும் அவர் மாபியா மற்றும் குண்டர்களை விட மும்பை காவல்துறைக்கு அஞ்சுவதாக எழுதினார். மும்பையில் எனக்கு ஹிமாசல பிரதேச அரசாங்கத்திடமிருந்தோ அல்லது நடுவண் அரசிடமிருந்தோ பாதுகாப்பு தேவை. மும்பை காவல்துறையின் பாதுகாப்பு தேவையில்லை என்றும் எழுதியிருந்தார். இந்தக் கீச்சுவிற்குப் பதிலளித்த சிவசேனை பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரௌட், மும்பை காவல்துறைக்கு மிகவும் பயப்படுகிறார் என்றால் அவர் மும்பைக்கு வரக்கூடாது என்று கூறியிருந்தார். கங்கனா ரனாவத்துக்கு வெளிப்படையாகவே சிவசேனை தலைவர்கள் மிரட்டல் விடுத்ததால் அவர் இன்று மும்பை செல்லும்போது அவருக்கு பாதுகாப்பு வழங்க ஹிமாச்சல பிரதேச அரசு பரிசீலித்து வந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு நடுவண் படை பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஹிந்தித் திரையுலக நடிகை கங்கனா ரனாவத் மும்பைக்கு வந்துள்ள நிலையில், இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம், நாளை உங்கள் அரசு கவிழலாம். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆதில், உத்தவ் தாக்கரே, எனது கட்டடத்தை இடித்ததன் மூலம் என்னை பழிவாங்கியதாக நினைக்கிறீர்கள். காலம் மாறும், உங்களுடைய அடாவடித்தனம் மாறும். இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம். நாளை உங்கள் அரசு கவிழலாம். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று கூறி அவர் பதவிட்டுள்ளார். மும்பை பாலி ஹில் பகுதியில் மாநகராட்சி ஊழியர்களால் பகுதியளவு இடிக்கப்பட்ட தமது அலுவலக கட்டடத்தின் காட்சிகளை கீச்சுவில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் ஜனநாயக படுகொலை என்று குறிப்பிட்டு ஐந்து காணொளிகளை அவர் பகிர்ந்துள்ளார். முன்னதாக, மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் அவருக்கு ஆதரவாக கார்னி சேனை அமைப்பினரும், எதிராக சிவசேனை தொண்டர்களும் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் பேரறிமுகர்களுக்கான சிறப்பு வாயில் வழியாக அவரை பாதுகாப்புப் படையினர் அழைத்துச் சென்றனர். இந்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி சண்டீகரிலும் மும்பையிலும் கங்கனா ரனாவத்துக்கு நடுவண் சிறப்புக் காவல் படையினர் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான கட்டடத்தை, மேலும் இடிக்க மும்பை உயர் அறங்கூற்றுமன்றம் இன்று நண்பகலில் தடை விதித்து உத்தரவிட்டது. அவரது கட்டடத்தின் அமைப்புகள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது சட்ட விரோதம் என்று கூறி மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலையில் இடிக்கத் தொடங்கினர். மும்பையில் திரைப்பேரறிமுகங்கள் அதிகம் வசிக்கும் பகுதி பாந்த்ரா. அங்கு கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான கட்டத்தில் சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்யப்பட்டதாக ப்ரிஹான்மும்பை முனிசிபல் கார்பரேஷன் என்ற மும்பை மாநகராட்சி அதிகாரிகள் குற்றம்சாட்டி அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கவனஅறிக்கை அனுப்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான பாடுகள் குறித்து கீச்சுவில் பதிவிட்ட கங்கனா ரனாவத், ஒரு இடுகையில், சஞ்சய் ரௌட் என்னை வெளிப்படையாக மும்பைக்கு வரக்கூடாது என்று மிரட்டியுள்ளார், என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்து, மகராஷ்டிராவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் இன்று மும்பை வரும்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது தந்தை சார்பில் ஹிமாச்சல பிரதேச காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அவருக்கு நடுவண் சிறப்புக் காவல் பாதுகாப்பு வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. நான் 15 ஆண்டுகள் உழைத்து மும்பையில் மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற அலுவலகத்தைத் தொடங்கினேன். இதுதான் என் கனவாக இருந்தது. எனக்கான ஒரு தனி அலுவலகம். ஆனால், அந்தக் கனவை அவர்கள் உடைப்பதற்கான நேரமாக இது இருக்கிறது. திடீரென மாநகராட்சி அதிகாரிகள் வந்து என் அலுவலகத்தை அளக்கத் தொடங்கினர். சுற்றி இருப்பவர்களையும் தொந்தரவு செய்தார்கள். நாளை இந்த கட்டடத்தை இடிக்கப்போவதாக கூறுகிறார்கள் என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் இன்று அவருக்கு சொந்தமான கட்டடம் பகுதியளவு இடிக்கப்பட்டுள்ளது கங்கனா ரணாவத் ஹிந்தித் திரையுலகில் இருக்கிற போதைப் பழக்கத்தை கண்டிக்கப் போய், அது மும்பைக் காவல்துறை மீதான குற்றச்சாட்டாக மாறி, தனது மாநில காவல் துறைக்கு வக்காலத்து வாங்கி சிவசேனை பாராளுமன்ற உறுப்பினர் கடுமை காட்ட, கங்கனா ராணாவத் தனது சொந்த மாநிலத்திடமும், நடுவண் அரசிடமும் பாதுகாப்பு கேட்க, மும்பை மாநகராட்சி பழைய கோப்புகளை தூசி தட்டி கங்கனா ரணவத்தின் மணிகர்ணிகா பிலிம்ஸ் அலுவலகக் கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்க, மும்பை உயர் அறங்கூற்றுமன்றம் மணிகர்ணிகா பிலிம்ஸ் கட்டிட இடிப்புக்குத் தடை விதிக்க நடுவண் பாஜக அரசு பாதுகாப்பு தந்து கங்கனா ரணாவத்தை அரவணைக்க- கங்கனா ரணாவத் ஹிந்தித் திரையுலகில் இருக்கிற போதைப் பழக்கத்தை கண்டிக்க முன்னெடுத்த முயற்சி காணமல் போய்விட்;டது. போதைப் பொருள் மாபியாக்கள் பாதுகாக்கப் பட்டார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



