போதைப் பொருள் பயன்படுத்துதாக கன்னட திரை பேரறிமுகங்கள் மீது நடுவண் குற்றப்பிரிவு காவலர்கள் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். தமிழ்த் திரையுலகில் பேரறிமுகமாக இருக்கிற நிக்கி கல்ராணியின் உடன்பிறப்பு நடிகை சஞ்சனா கல்ராணி கைது பரபரப்பைக் கிளப்பி வருகிறது. 24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கன்னட திரையுலகில் அதிகளவில் நடிகை, நடிகர்கள் போதை பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், போதைப்பொருள் கும்பலுடன் அவர்கள் கமுக்கத் தொடர்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னட திரை உலகின் பேரறிமுக நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் அணியமாகும்படி காவல்துறையினர் கவனஅறிக்கை அனுப்பினர். ஆனால், 2 பேரும் அணியமாகவில்லை. இதையடுத்து நான்கு நாட்களுக்கு முன்பு ராகினி திவேதியை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், பெங்களுருவில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் நடுவண் குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்த காவலர்கள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். கன்னட திரையுலகில் அடுத்தடுத்து நடிகைகள் போதைப் பொருள் பயன்பாடு குறித்து சிக்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை ராகினி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நடிகை சஞ்சனா கல்ராணி பேரறிமுக தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் உடன் பிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் விற்பனை கும்பலை நேரடியாகப் பிடித்து போதைப் பொருள் நுகர்வுப் பழக்கம் உள்ள கலைஞர்களை மருத்துவக் கலந்துரையாடல் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். இந்தத் தலையைச்சுற்றி மூக்கைத் தொடும் முயற்சியில் ஏதேனும் அரசியல் இல்லாமல் இருந்தால் சரிதான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



