Show all

தனி ஆளாகப் போராடும் நடுவண்அரசு அதிகாரி! பாஜக அரசின் என்னென்ன அடாவடிகளை அந்த அப்பாவி அதிகாரி சந்திக்கப் போகின்றாரோ

இந்தியாவின் அலுவல் மொழிகளாக அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22மொழிகளை வெறுமனே குறித்து விட்டு, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நடுவண் அரசு அலுவலகத்திலும் ஹிந்திக்கு ஒரு பிரிவை ஒதுக்கி ஹிந்தித் திணிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருவதில் நேரடியாக பல மாநில அதிகாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.  

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தைச் சேர்ந்த நடுவண் அரசு அதிகாரிகள் மீது ஹிந்தி மொழி திணிக்கப்படுவது, நடுவண் பாஜக ஆட்சியில் கூடுதலாக்கப்பட்டு வருகிறது. நடுவண் பாஜக அரசின் ஹிந்தித் திணிப்பு அடாவடியில் நேரடியாக பாதிக்கப்பட்டு போராடி வருகிறார் சரக்கு சேவைவரி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன். 

சென்னை புறநகர் பகுதியில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தில் ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்ட வடஇந்தியர்கள் பணியில் உள்ளபோதும், ஹிந்தி தெரியாத உதவி ஆணையராக பணிபுரிந்து வரும் பாலமுருகனுக்கு, ஹிந்தி மொழியைப் பரப்பும் பிரிவில் திட்டமிட்டு வேலை ஒதுக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாலமுருகன் குடும்பத்தார் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பதால் சிறு அகவையில் இருந்தே, உதவி ஆணையராக பணிபுரிந்து வரும் பாலமுருகன் தாய்மொழி தமிழ் மீதான பற்று மிகுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி ஆணையராக பணிபுரிந்து வரும் பாலமுருகனின் தந்தை மருத்துவர் பாலசுந்தரம், ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர். காவல்துறையினர் நடத்திய தடியடியில் காயமடைந்தார். 

என் குடும்பத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட உணர்வு என்பதை விட தாய்மொழியை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருந்தது. தற்போது எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் ஈடுபாடோடு செய்யமுடியாது என்ற காரணத்தால்தான் ஹிந்தி பிரிவில் இருந்து மாற்றம் வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதோடு ஹிந்தி தெரிந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் வேண்டுமென்றே என்னை போன்றவர்களை அமர்த்துவதை இனிவரும் காலங்களில் தவிர்க்கவேண்டும் என்பதற்காக துறை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என பாலமுருகன் கூறுகிறார்.

பணி நிமித்தமாக மும்பையில் வசித்தபோது, தனது குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொண்டனர் என்று கூறிய அவர், என் மனைவிக்கும் ஹிந்தி தெரியும். என் குழந்தைகள் மும்பையில் படித்தபோது ஹிந்தி கற்றுக்கொண்டனர். ஹிந்தி கற்றுக்கொள்ளகூடாது என்பது என் கொள்கை அல்ல. ஹிந்தி தெரியாத என்னை ஹிந்தியை பரப்பும் வேலையில் அமர்த்தியதை ஏற்க முடியாது என்பதுதான் என் வேண்டுகோள், என்கிறார்.

முன்னதாக, தனது துறைத்தலைவருக்கு இரு பக்க கடிதத்தை பாலமுருகன் அனுப்பியிருந்தார். அதில், ஆணையர் அலுவலகத்தில் ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட ஒரு உதவி ஆணையர் பணியில் உள்ளார். ஹிந்தி பிரிவு பணியை அவருக்கு ஒதுக்காமல், எனக்கு ஒதுக்கியது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகும். இது என்னுடைய தமிழ் உணர்வை சிறுமைப்படுத்தும் நோக்குடன் செய்துள்ளனர். இந்த அலுவலகத்தில் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். அவர்களை ஹிந்தி பிரிவு பணியில் அமர்த்தாமல், தமிழர்களை அந்த பணியில் அமர்த்தியுள்ளது சரியான செயலாகாது, என பாலமுருகன் கூறியுள்ளார்.

மேலும் ஹிந்தி பிரிவில் மூன்று பணியிடங்கள் உள்ளதாகவும், தற்போதுள்ள பாலமுருகன் மற்றும் ஒரு அதிகாரி ஆகியோருக்கும் ஹிந்தி தெரியாத நிலையில், அதே பிரிவில் மேலும் ஒரு ஹிந்தி தெரியாத ஒரு அதிகாரிக்கு அங்கே பணி ஒதுக்கியுள்ளதாக கவனத்தில் கொள்ளவேண்டும் என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்தி பிரிவில் கோப்புகளில் எழுதப்படும் குறிப்பு மற்றும் கடிதங்கள் ஹிந்தியிலேயே இருக்கவேண்டும் என்பது விதி. இதற்கு முன்னர் அலுவலகத்தில் இருந்த வட மாநில அலுவலர்கள் ஹிந்தியில் எழுதுவார்கள் என்றும் அவர்கள் எழுதித்தரும் குறிப்பு மற்றும் கடிதங்களுக்கு கையெழுத்து மட்டுமே போட்டதாக பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஹிந்தி தெரிந்த அதிகாரிகள் அதே அலுவலகத்தில் உள்ளபோது, ஹிந்தி தெரியாத மூன்று அதிகாரிகளை ஹிந்தி பிரிவில் பணியமர்த்துவது ஹிந்தியைத் திணிக்கும் செயல் என அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.