Show all

கொரோனாவிற்கு கபசுரகுடிநீர்! தலைமை அமைச்சர் மோடி கலந்துரையாடலில், சித்த மருத்துவத்தின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது

கொரோனாவைக் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் என்பவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தொடர்ந்த பொது நல மனுவிற்கு உடனடியாக விடைகாணும் பணி தொடங்கியது.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவைக் குணப்படுத்த இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்காத நிலையில், சித்த மருத்துவத்தில் இந்நோயை குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் என்பவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் பொது நல மனுவைத் பதிகை செய்திருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த அறங்கூற்றுவர்கள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, நடுவண் மற்றும் மாநில நலங்குத் துறை செயலாளர்களும், ஆயுஷ் அமைச்சக செயலாளரும், நடுவண் சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகமும் நான்கு கிழமைகளில் பதிலளிக்கும்படி, உத்தரவிட்டது.

இந்த அடிப்படையில் இன்று காலையிலேயே மாற்று மருத்துவத் துறை சிறப்பாளர்களை அழைத்து, அவர்களுடன்- இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி அவர்களோடு கலந்துரையாடல் நிகழ்த்தினார். சித்த மருத்துவத்தின் சார்பாக, டெங்குவுக்கு தமிழகத்தில் நிலவேம்பு குடிநீர் முன்னெடுக்கப்பட்டது போல, கெரோனாவிற்கு கபசுரகுடிநீர் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 

விரைவில் அறங்கூற்று மன்றத்திற்கு இது தொடர்பாக நடுவண் அரசு அறிக்கை தயாரித்து அனுப்பும் என்று தெரிய வருகிறது. 

இந்த நிலையில், கடந்த ஒரு கிழமைக்கு முன்பாகவே, கொரோனா நுண்ணுயிரி  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகப்பட்டினம் மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கபசுரக் குடிநீரை அருந்துவதன் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீர் என்பது, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை இலை உள்ளிட்ட 15 மூலிகைப்பொருட்களை பொடியாக்கி தயாரிக்கப்படும் மருந்தாகும்.

இந்த மருந்து தமிழக அரசு சார்பில், நாகப்பட்டினம் மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.