Show all

பரவை முனியம்மா காலமானார்! ஒரு கிழமைக்குள் திரையுலகில் காலமான மூன்றாவது பேரறிமுகம்

கடந்த ஞாயிறன்று விசு, நடுவில் சேதுராமன் இந்த ஞாயிற்றுக் கிழமையில் பரவை முனியம்மா நம்மை விட்டு பிரிந்துள்ளனர். திரையுலகம் குழுவாக இணைந்து இவர்கள் நினைவை போற்றிக்கொள்ளவியலாத நிலையில், கொரோனா ஊரடங்கு வேறு. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்கிறது தமிழ்த் திரையுலகம்.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பேரறிமுக நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை மதுரையில் காலமானார். நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார் பரவை முனியம்மா.

மதுரை பரவையைச் சேர்ந்த இவர் தன்னுடைய சிறு அகவையிலேயே கலைத் துறைக்குள் நுழைந்தவர். நாட்டுப்புறப்பாடல்களை பாடி வந்த இவர் தூள் படத்தில் நடிகர் விக்ரமிற்கு பாட்டியாக நடித்து, பலரது மனங்களிலும் இடம்பிடித்தார்.

அப்படத்தில் இவர் பாடிய மதுர வீரன் தானே பாடல் மிகப்பெரும் புகழை இவருக்கு தேடித் தந்தது.

பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சி ஒன்றையும் பரவை முனியம்மா நடத்தி வந்தார். கிராமத்து சமையலை அதன் மூலம் பலருக்கு அறிமுகப்படுத்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், மூளை வளர்ச்சி குறைவான தன்னுடைய கடைசி மகனுக்கு, தனக்கு பின்னரும் தன்னுடைய உதவித்தொகை கொடுக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை விடுத்தார்.

இவருடைய நிலையை தெரிந்து கொண்ட 2015ல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஆறு லட்ச ரூபாயை நிதி உதவியும், குடும்ப செலவுகளுக்கு மாதந்தோறும் ஆறாயிரம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவர் இறந்துவிட்டதாக வதந்திகள் வெளியாகின.

இவர் வறுமையின் காரணமாக மருத்துவ செலவுக்குக் கூட பணமில்லாமல் சிரமப்படுகிறார் என செய்திகள் வந்ததும் நடிகர்கள் விசால், தனுஷ் போன்ற பலரும் இவருக்கு பண உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பாகவும் உதவித்தொகை வழங்கப்பட்டது.

கலைமாமணி பட்டம் வழங்கி தமிழக அரசு இவரை அங்கீகரித்தது. இவர் இறுதியாக நடித்த படம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான்கராத்தே.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல நாட்களாக முடங்கிக் கிடந்த அவர் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார். மாலையில் அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.