கல்வி, வேலை, தொழில், வணிகம், கடன் எதற்கும் உத்தரவாதம் அளிக்கப் பெறாமல் நடோடிகளாக இந்தியா முழுக்க அலைபவர்களை, புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற தலைப்பில் கொரோனா அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களுக்கு மாநிலங்களிடமிருந்து குடும்ப அட்டைப் பொருட்கள் வாங்கித்தரும் வகைக்காக, அதிகாரப்பாடாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை இலட்சியத்திட்டமாக முன்னெடுக்கிறது நடுவண் பாஜக அரசு. 11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் பாஜக அரசின் இலட்சியத் திட்டமான ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம், தமிழகத்தில் ஆவணி- புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர்) நடைமுறைப்படுத்த இருப்பதாக, நடுவண் பாஜக உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம், தமிழக அதிமுக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நடுவண் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சர்களிடமும், டில்லியில் இருந்தபடி, காணொளிக் கலந்துரையாடல் வாயிலாக நடுவண் பாஜக அரசின் இலட்சியத் திட்டமான ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை வலியுறுத்தினார். செயலலிதா அவர்கள் இருந்த வரை, நடுவண் பாஜக அரசின் மாநிலங்களின் உரிமைப் பறிப்பு இலட்சியங்களான, ஒரே நாடு என்கிற தலைப்பில் நிர்பந்திக்கப்பட்ட சரக்குசேவை வரி, நீட், குடும்ப அட்டை என எதுவும் ஒரேநாடு என்ற தலைப்பில் நடுவண் அதிகாரப்பாட்டிற்கு சென்று விட கூடாது என்பதில் கவனமாக இருந்தார். தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழகத்தின் அடிப்படையான “மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்கிற உரிமை முழக்கத்தை காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். வரி வாங்கும் உரிமையை ஒரேநாடு ஒரே சரக்கு சேவை வரி என்ற தலைப்பில் நடுவண் பாஜக அரசிற்கு விட்டுக் கொடுத்து விட்டு, ஒவ்வொரு ஆண்டும் தள்ளி தள்ளி, கெஞ்சி கெஞ்சி சரக்கு சேவைவரியின் தமிழகப் பங்குகளை மன்றாடிப் பெற்று வருகிறது தமிழக அரசு. அடுத்து மருத்துவக் கல்வி உரிமையை நீட் தேர்வில் காவு கொடுத்தது. இன்னும் மீத்தேன் என்பதில் வேளாண் தொழிலையும், சுங்கச்சாவடிகள் மூலம் சாலை உரிமைகளையும் என்று பல பலவற்றில் உரிமைகளை இழந்து வருகிறது. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம், தமிழகத்தில் ஆவணி- புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர்) நடைமுறைப்படுத்த இருப்பதாக, நடுவண் பாஜக உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம், தமிழக அதிமுக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். கீழ்கண்ட மன்றாடல்களையும் தமிழக அதிமுக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நடுவண் பாஜக அரசிடம் கெஞ்சியுள்ளார். தமிழக குடும்பஅட்டைப் பொருட்கள் கடைகளில், கடந்த மாதத்தில் 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றை இலவசமாக வழங்கியது போல, இம்மாதமும், வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த மாதத்தில் 96 விழுக்காடும் இம்மாதத்தில் நடப்பு கிழமை வரை 85 விழுக்காடும் அரிசி வழங்கப்பட்டுள்ளது. உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை செய்வதற்காக, தமிழகத்திற்கு, 2,609 கோடி ரூபாய் மானியத்தை வழங்காமல், நடுவண் அரசு நிலுவை வைத்துள்ளது. அந்தத் தொகையை, உடனே விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, 4.66 லட்சம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 56 கோடி ரூபாய் செலவில், தலா, 15 கிலோ அரிசி, பருப்பு, பாமாயில், இரு மாதங்களாக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைப் பொருட் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்க, கருவிகள் வாங்கப்பட உள்ளன. இவற்றை ஒருங்கிணைக்கும் தொழில் நுட்ப பணிகள் முடிந்ததும், தமிழகத்தில் ஆவணி- புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர்) ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு, தமிழக அதிமுக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



