Show all

இஸ்ரேல் தலைமைஅமைச்சர் இந்திய பயணத்திற்கு 10நாட்களே உள்ள நிலையில் இஸ்ரேல் உடனான 3000கோடி ஒப்பந்தம் ரத்து

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே ராணுவ உபகரணங்கள் வாங்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. மோடி இஸ்ரேல் சென்றிருந்த போது இஸ்ரேலுடன் கூடுதலாக ராணுவ ஒப்பந்தங்கள் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு முதல்முறையாக வருகிற அடுத்த கிழமையில் 4 நாட்கள் பயணமாக இந்தியா வர உள்ளார்.

இஸ்ரேல் நாட்டுடன் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெற இந்தியா சார்பில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் 1,600 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேலின் முன்னணி ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனமான ரபேல் நிறுவனத்திடம் இருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது.

அந்த ஒப்பந்தத்தை தற்போது இந்தியா திடீரென ரத்து செய்துள்ளது. இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை ரபேல் ராணுவ தளவாட நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்காக ரபேல் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியாவுடன் இணைந்து ரபேல் நிறுவனம் ஐதராபாத்தில் தனிநிறுவனம் தொடங்கி அதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. டேங்க் எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாலும், ரூ.500 கோடி மதிப்பில் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் 131 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,657

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.