Show all

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் முடங்கப் பட்டது

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அதுதொடர்பாக விவாதம் நடத்த மறுப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், அதை நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன.

இதன் தொடர்ச்சியாக ஆளும் பாஜக உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் எழுந்தது. இது அவையில் பெரும் கூச்சல், குழப்பத்துக்கு வித்திட்டது. முன்னதாக, மகாராஷ்டிர மாநிலத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரமும் அவையில் கடுமையாக எதிரொலித்தது. இத்தகைய நிகழ்வுகளால் எந்த நடவடிக்கையும் நடைபெறாமல் மாநிலங்களவை புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்ச அறங்கூற்று மன்றம் அண்மையில் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டது. ஆறு மாதங்களுக்கு முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிப்பதாகக் கூறிய அறங்கூற்று மன்றம் இதுதொடர்பாக உரிய சட்டத்தை வகுக்குமாறு நடுவண் அரசை பரிந்துரைத்தது.

அதன்படி, இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா வரையறுக்கப்பட்டது. முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க அதில் வகை செய்யப்பட்டுள்ளது.

அந்த மசோதா கடந்த கிழமை மக்களவையில் தாக்கலானது. அதில் இடம்பெற்றிருந்த சில அம்சங்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இருப்பினும் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை மக்களவையில் அதிகமாக இருப்பதால் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்து வந்தாலும், அதை நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிய பிறகே நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

அதற்கு நடுவண் அரசு தயாராக இல்லை. விரைந்து மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. இந்தச் சூழலில், மாநிலங்களவையில் புதன்கிழமை பிற்பகல் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.

இந்த விவகாரத்தை ஆய்வுக்குட்படுத்த நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில், இடம்பெற வேண்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உத்தேசப் பட்டியலையும் அவர் அளித்தார். அதில் காங்கிரஸ் மட்டுமன்றி அதிமுக, திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களது பெயரும் இடம்பெற்றிருந்தன.

இதற்கு ஆளும் பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘பெண்களுக்கு அதிகாரமளிப்பதும், மதிப்பளிப்பதும் தவறா என்று எதிர்க்கட்சியினரை நோக்கி அவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய ஆனந்த் சர்மா, ‘முத்தலாக் தடை மசோதாவுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அதை ஆதரிக்கிறோம்; அதேவேளையில் அதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றார்.

இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:

முத்தலாக் நடைமுறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச அறங்கூற்று மன்றம் கூறியுள்ளது. ஆறு மாதங்களுக்குள் உரிய சட்டத்தை வகுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச அறங்கூற்று மன்றம் கூறிய ஆறு மாத அவகாசம் இன்னும் ஐம்பது நாட்களில் நிறைவடையும். அதன் பொருட்டு இந்த மசோதாவை விரைந்து நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதைக் கருத்தில்கொண்டு எதிர்க்கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களவையில் மசோதாவை ஆதரித்த காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் அதை எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது என்றார் ஜேட்லி.

எதிர்க்கட்சியினர் அவையின் மையப் பகுதிக்கு வந்து நடுவண் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவையின் அலுவல்களை மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் நாள் முழுவதுக்கும் ஒத்திவைத்தார்.

முத்தலாக் நடைமுறை பெண்களுக்கு எதிரான முஸ்லீம் மதநடவடிக்கை என்பதாலேயே, முஸ்லீம் மதத்திற்கு ஏதாவதொரு வகையில் ஒரு பின்னடைவை ஏற்படுத்த கிடைத்ததொரு அரிய வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டே ஆக வேண்டும் என்று பாஜக கடுமையாக முயல்கிறது.

பாஜக இதில் வெற்றி பெறுமானால், முஸ்லீம் மதத்திற்கான தனிச் சட்டம் என்கிற வரம்பின் கரையை இலேசாக உடைத்து விட்டால், முஸ்லீம்களை கட்டுடைத்து, இந்திய பொதுச் சட்டத்திற்குள் கொண்டு வரும் வாய்ப்பாக கருதுகிறது பாஜக.

முஸ்லீம்கள் கட்டுமானமாக இருக்க விரும்பினால் அவர்களே இதற்கு ஒரு தீர்வுகண்டு முத்தலாக் நடைமுறையை அகற்றிக் கொள்வது அவர்களுக்கு நல்லது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,657

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.