டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அபராதத்தின் மூலம் மக்களைத் திருத்துவேன் என்பது சிக்கினவன் செத்தான்டா என்கிற நடைமுறையின் பாற்பட்டதுதானே? மரணம் என்பது எல்லோருக்குமானதுதான்! ஆனால் எல்லோருமா மரணிக்கப் போகின்றார்கள் என்ற நம்பிக்கையில் தான் மனித வாழ்க்கையே ஓடிக்கொண்டிருக்கிறது. மரணத்திற்கு பயந்து வாழுங்கள் என்று மதங்கள் சொல்லலாம்; எந்த மனிதனாவது கேட்பானா? பாஜகவிற்கு ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள இந்திய அரசின், போக்குவரத்து விதிமீறல்களுக்கான பத்து மடங்கு அபராதத்தை சிக்கினவன்தானே செத்தான் என்பதாகதான் 99.99 விழுக்காடு மக்கள் எடுத்துக்கொள்வார்கள். அதுவும் இந்தியா மக்களின் வாழ்க்கை நம்பிக்கையின் அடிப்படையில் தாம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில், மருத்துவருக்கு படித்து முன்னேறலாம் என்று எந்தக் குழந்தையோ, பெற்றோரோ வாழ்க்கையை இயல்பாக ஓட்டி விட முடியாது. இயற்கையின் கொடையாக வாய்ப்பு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஏனென்றால் மக்கள் விருப்பத்திற்கு வாழ்க்கை அமைத்துத் தருகிற அரசு இந்தியாவில் இன்னும் அமையவில்லை. வாழ்க்கைக்கு இருந்து விட்டுப் போகட்டும். சாலைப் பயணத்திற்கு ஏற்ற சாலைகள் கிடையாது. சாலையில் பயணிக்க 40 கிமீட்டருக்கு நிறுத்தி நிறுத்தி வாடகை செலுத்த வேண்டும். இந்த அழகில் மக்கள்: சிக்கினவன் செத்தான்டா அபராதத்தை எப்படிக் கடப்பது என்கிற யுக்தியை பின்பற்றுவார்களா? அபராதம் (மரணம்) ஆபத்தானது என்று அஞ்சி வாழும் மதவாழ்க்கையை முன்னெடுப்பார்களா? என்ற கேள்வியை தமிழக சான்றோர் பெருமக்கள், இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள பாஜக அரசை நோக்கி முன்வைக்கின்றனர். மோட்டார் வாகனச்சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். புதிய அபராத விதிமுறைகளால் பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்படும் எனக்கூறி மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் திருத்தப்பட்ட வாகனச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள முகர்பா சவுக் பகுதியில் அதிக சுமையை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த சரக்கு லாரியை மறித்த போக்குவரத்து காவல்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றிவந்ததால் புதிய வாகனச்சட்டத்தின் படி சாலை விதிகளை மீறியதாக 2 லட்சத்து 500 ரூபாயை அபராதமாக விதித்தது. அபராதம் விதிக்கப்பட்டதற்கான கட்டணச்சீட்டையும் லாரி ஓட்டுநரிடம் போக்குவரத்து காவல்துறையினர் வழங்கினர். புதிய மோட்டார் வாகனச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சாலை விதிகளை மீறியதாக நாட்டில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள பாஜக- இந்திய மக்களை அச்சத்தோடு எதிர்கொள்ளும் மதவாழ்க்கைக்கு பயிற்றுவிக்கும் முகமாகவே ஆர்எஸ்எஸ்சின் வழிகாட்டுதலில் ஒவ்வொரு சட்டத்தையும் முன்னெடுக்கிறது என்கிற குற்றசாட்டை உறுதி படுத்தியிருக்கிறது, புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின் பத்து மடங்கு அபராதத்தின் மூலம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,274.
டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.