திடீரென சிறப்பு தொடர்வண்டிகளை இரத்து செய்து, தொழிலாளர்களை இங்கேயே இருக்கச் செய்ய கட்டாயப்படுத்துவது என்பது கொத்தடிமைத்தனத்துக்கு ஈடானது என்று கர்நாடக பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கல்விஅறிவு பெறாத, வட இந்திய பாமரமக்கள், கூலி வேலைக்காக, புலம்பெயர் தொழிலாளர்களாக தென்னக மாநிலங்களுக்கு வந்து கூடாரங்களில் வாழ்ந்து வேலைசெய்து வருகின்றனர். பெங்களூரில் இருந்து உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடிய தொடர்வண்டிகளை திடீரென முதல்வர் எடியூரப்பா இரத்து செய்தார். இதை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடிய காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு தொடர்வண்டி புறப்படும் மாநிலம் மற்றும் சேரக்கூடிய மாநிலம் ஆகிய இரு மாநில அரசுகளும் சம்மதித்தால் சிறப்பு தொடர்வண்டிகளை தொடர்வண்டித்துறை இயக்க ஒத்துக் கொண்டுள்ளது. உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து தொடர்வண்டிகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்வண்டி நிலையம் வர தொடங்கினர். ஆனால் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொழில்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மனைவணிக அதிபர்கள், கட்டுமான தொழில் தலைவர்கள் போன்றோரின் அமைப்பு பிரதிநிதிகள் எடியூரப்பாவை சந்தித்தனர். இந்த ஆலோசனையின்போது, ஊரடங்கு காலகட்டத்தில், தாங்கள் சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக இந்தத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வசதி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும், தற்போது தொழில் இயங்கக் கூடிய நேரத்தில் அவர்களை ஊருக்கு அனுப்பினால், தொழிலை நடத்த முடியாது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து திடீரென சிறப்பு தொடர்வண்டிகள் இரத்து செய்யும் கோரிக்கையை எடியூரப்பா வைத்தார். இதையடுத்து இன்று முதல் தொடர்வண்டிகள் இரத்து செய்யப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். எப்படியும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கானோர் பெங்களூரிலிருந்து நடந்தே செல்லத் தொடங்கி விட்டனர். பெங்களூரிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் வரை நடந்து செல்வதென்றால் சுமார் 1500 கிலோ மீட்டருக்கும் மேல் தொலைவு இருக்கிறது. அப்படி இருந்தும் இந்த தொழிலாளர்கள் நடந்தே செல்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண பைரே கவுடா என்பவர் இப்படி நடந்து சென்ற தொழிலாளர்களைப் பார்த்து பேசி, அவர்கள் நடந்தே செல்வதை காணொளி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அரசு தங்களை கைவிட்ட நிலையில் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்பதால் நடந்தே சொந்த ஊருக்கு செல்கிறோம் என்று அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். திடீரென சிறப்பு தொடர்வண்டிகளை இரத்து செய்து, தொழிலாளர்களை இங்கேயே இருக்கச் செய்ய கட்டாயப்படுத்துவது என்பது கொத்தடிமைத்தனத்துக்கு ஈடானது என்று கர்நாடக பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், இதே தொனியில் அரசை கண்டித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



