சிதம்பரம் திகார் சிறையில் வழக்கு தொடர்பாக- பரிந்துரைத்த அதிகாரிகள் மீதே தவறு இல்லை எனில் ப.சிதம்பரம் மீது மட்டும் எப்படிதவறு என்று மன்மோகன்சிங் கேள்வி எழுப்புகிறார். 08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐ.என்.எக்ஸ் ஊடக வழக்கில் பரிந்துரைத்த அரசு அதிகாரிகள் மீது எந்த தவறும் இல்லை எனில் அந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து போட்ட முன்னாள் இந்தியஅரசு அமைச்சர் ப.சிதம்பரம் மீது மட்டும் எப்படி குற்றம் சுமத்த முடியும்? என முன்னாள் இந்தியஅரசு தலைமைஅமைச்சர் மன்மோகன்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.என்.எக்ஸ் ஊடக நிறுவனத்துக்கு முறைகேடாக அன்னிய முதலீடு பெற்றுக் கொடுத்தார் சிதம்பரம் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை இந்தியஅரசு குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. இவ்வழக்கில் பிணை கோரி ப.சிதம்பரம் மனு பதிகை செய்துள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். இந்தியஅரசின் முன்னால் தலைமைஅமைச்சர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திகார் சிறையில் சிதம்பரத்தை நேற்று சந்தித்து பேசினர். இச்சந்திப்பு குறித்து கீச்சுப் பக்கத்தில் சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மன்மோகன்சிங் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எமது நண்பர் ப.சிதம்பரம் நீண்டநாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் அறங்கூற்றுமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நமது அரசு விதிகளின்படி எந்த ஒரு தனிநபரும் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது. அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து ஆலோசித்து பின்னர் முடிவுகள் எடுக்கப்படும். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கிலும் கூட அதிகாரிகள், அரசு செயலாளர்கள் மொத்தம் 6 பேர் கூட்டாக பரிந்துரைத்துள்ளனர். அந்த பரிந்துரைக்குத்தான் சிதம்பரம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். பரிந்துரைத்த அந்த அதிகாரிகளே தவறு செய்யவிலை எனில் ஒப்புதல் அளித்த அமைச்சர் மீது மட்டும் எப்படி குற்றம் சுமத்த முடியும்? அதிகாரிகளின் பரிந்துரைகளை அங்கீகரிப்பதற்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க நேரிட்டால் ஒட்டுமொத்த அரசாங்க கட்டமைப்புமே சரிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசிலும் சரி, மாநில அரசுகளிலும் சரி பெரும்பான்மை பலம் பொருந்திய அரசுக்கு- அதிகாரிகள் கட்டுப்பட்டு பெரும்பான்மை அரசுக்கு ஆதரவாக எல்லா தில்லாலங்கடிகளிலும் அரசுக்கு மிகுந்த ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆனால் அதே சமயம் எந்த ஒரு கட்சியாவது சிறுபான்மை பலத்தில் ஆட்சியில் அமர்ந்து விடுமானால், அதிகாரிகள் செய்யும் தில்லாலங்கடிகளுக்கு எல்லாம் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். காங்கிரசுக்கும், திமுகவிற்கும் இப்படியான சிக்கல் நிகழ்வது வாடிக்கை என்கிறார்கள் அரசியல் வட்டார விவரமறிந்தவர்கள். ஹிந்தித் திணிப்பு, இலங்கைக்கு அமைதிப்படை, போன்றவைகளில் எல்லாம் அதிகாரிகள் முன்னெடுப்பால், காங்கிரசும், இராஜிவ் காந்தியும் பலிகடாவாக்கப் பட்டார்கள் என்கின்றனர் திருச்சி வேலுச்சாமி போன்றவர்கள் நீண்ட காலமாகவே. அப்போதெல்லாம் மன்மோகன் சிங்கிற்கு இந்த விவரம் புரியாமல்தான் இருந்திருக்கிறது என்றே நம்புவோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,286.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.