Show all

பொறியியல் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை கவனஅறிக்கை! பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரி.

நடிகர் விஜய்யின், பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி அளித்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த வியாழக் கிழமை அன்று, நடிகர் விஜய்யின், பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில், விளம்பரத்தட்டி விழுந்து சுபசிறி மரணமடைந்தது தொடர்பாக  அரசை விமர்சித்துப் பேசிய விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைத்தால் சுபசிறி மரணம் போன்ற சம்பவங்கள் நடக்காது எனக் கூறியிருந்தார். 

இந்த நிலையில், விழா நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை கவனஅறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கல்வி நிறுவனத்தில் திரைப்பட விழாவுக்கு எதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கலை-அறிவியல் கல்லூரிக்கு, கல்லூரி கல்வி இயக்குநரகம் சார்பில் இதேபோன்று விளக்கம் கேட்டு கவனஅறிக்கை அனுப்பப்பட்டு, அதிகாரிகள் ஆய்வும் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கருத்துகளை வெளிபடுத்தக்கூடிய விழாக்களுக்கு அனுமதி அளிக்கும் கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பு தகுதி ரத்து செய்யப்படும் என உயர் கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா எச்சரித்துள்ளார். 

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர் கல்வித் துறை செயலரிடம், பிகில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரிக்கு கவனஅறிக்கை அளிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அவர், சம்பந்தப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிக்கு கவனஅறிக்கை கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிக்கு பல்கலைக்கழக இணைப்பு தகுதி தொடர்வது சந்தேகம்தான். இதுபோன்ற விழாக்களுக்கு எந்தவொரு உயர் கல்வி நிறுவனமும் அனுமதி அளிக்கக் கூடாது.

சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் அனுமதி அளிக்கலாம். ஆனால், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தக்கூடிய விழாக்களுக்கு அல்லது நிகழ்ச்சிகளுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் அனுமதி அளிக்கக்கூடாது. 

மீறி அனுமதித்தால், அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு இணைப்பு தகுதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

பொதுவெளியில் நடத்தப் படும் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி பெறவேண்டும் என்று ஒரு நடைமுறை இருக்கிறது. எல்லாக் கட்சிகளும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இந்த அனுமதி பெற்றே நடத்துகின்றன. காவல்துறை பாதுகாப்பு காரணம் குறித்து தெரிவித்து அனுமதி மறுக்கும் போது கூட அறங்கூற்றமன்ற அனுமதி பெற்று நிகழ்ச்சி நடத்தி வருகிற நடைமுறைகளும் உண்டு. 

உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியில், மற்றவர்களை நடத்த அனுமதிக்கும் விழாக்களுக்கு, உயர்கல்வித்துறையிடம்  அனுமதி பெறுவது போன்றதொரு நடைமுறையை உருவாக்கலாமே. அதை விடுத்து- சில நிகழ்ச்சிகள் நடந்து விட்ட நிலையில், ஆட்சியாளர்கள் முன்மொழிவை ஏற்று தும்பை விட்டு வாலை பிடிக்கும் முயற்சி வேண்டாமே என்கின்றனர் மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,286.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.