20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டுக்குத் தடை விதித்து கடந்த 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5116 (05.05.2014) உச்ச அறங்கூற்றுமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு நடைபெறாத சூழல் நிலவியது. இதனால் சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டு போராட்டங்களை மேற்கொண்டனர். இந்த நிலையில் சல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த 08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (21.01.2017) அவசர சட்டம் பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து 10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (23.01.2017) நடைபெற்ற சட்டமன்றச் சிறப்பு கூட்டத்தில் சல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதனால் அந்த மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியமான சல்லிக் கட்டை மீட்டெடுக்க தமிழக அரசு, அரசியல் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் அயராது மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்கிடையே ‘பீட்டா’ மற்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் தமிழக அரசு பிறப்பித்த சட்டத்திற்கு எதிராக உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச அறங்கூற்றுமன்றம் தமிழக அரசுக்கு அறிக்கை விடுத்து உள்ளது. தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இவ்வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கி உள்ளது. உச்ச அறங்கூற்றுமன்றம் இதுவரையில் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. பீட்டா தன்னுடைய மனுவில் விசாரணை அறிக்கையையும் பதிகை செய்து உள்ளதாம். தமிழகத்தில் அவனியாபுரம், பாலமேடு, திருநல்லூர், மறவப்பட்டியில் சல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை பதிகை செய்து உள்ளதாம். தமிழக அரசு, நடுவண் அரசு, இந்திய அறங்கூற்று மன்றங்கள், உச்ச அறங்கூற்று மன்றம் ஆகிய எல்லாவற்றுக்கும் மேலான, இந்தியாவின் சட்டத்தை வழிநடத்துவதற்கான பேரதிகாரம் பெற்ற பேரமைப்பா பீட்டா? என்று தமிழகத்தின் எளிய பாமரன் கேட்கிறான்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



