21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக அருணாசல பிரதேசத்துக்கு முந்தா நாள் சென்றார். இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அஞ்சா மாவட்டம் கபிது என்ற பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகளுக்கு சென்று, ராணுவ வீரர்களுடன் உரையாடினார். இதற்கிடையே, அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு திபெத் எனக்கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத சீனா, தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்திற்குத் தலைவர்கள் செல்லும் போது எதிர்ப்பு தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில், இராணுவ துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சான்யிங் கூறுகையில், சீனா - இந்தியா எல்லையில் கிழக்கு செக்டாரில் பிரச்சனை உள்ளது. பிரச்சனைக்குரிய இந்தப் பகுதிக்கு இந்திய தரப்பில் இருந்து பயணம் மேற்கொள்ளப்பட்டது அமைதிக்கு உகந்தது கிடையாது. எல்லையில் அமைதியை பராமரிக்க இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். -ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வோளாண்; கழகத்தின் அறிக்கையில் இந்தியாவுடன், ஜம்மு-கஷ்மீர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தனி நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளின் பட்டியலில்தான் இந்திய மாநிலங்கள் நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச பால்பண்னை நிறுவனத்துடன் இணைந்து, உணவு மற்றும் வேளாண் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்தான் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் அக்ஷாய்சின் என்ற பகுதியும் விடுதலை நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்ஷாய்சின் பகுதியை கஷ்மீரின் ஒரு பகுதி என இந்தியாவும், தங்களுக்கு சொந்தமானது என சீனாவும் உரிமைக் கொண்டாடுகின்றன. இந்திய மாநிலங்களைத் தனி நாடுகளாக குறிப்பிட்டது தவறானது அல்ல என விளக்கமளிக்கிறது, உணவு மற்றும் விவசாய கழகம். சர்ச்சைக்குரிய பகுதிகள் விடுதலை நாடுகளாகவே எடுத்துக்கொள்வதாக அவ்வமைப்பு கூறுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



