28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையச் சமநிலைக்கு ஆதரவாக இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இணைய சமநிலைக்கு எதிராக எந்த மாற்றமும், சட்டமும் கொண்டு வரப்போவதில்லை என்று கூறியுள்ளது. இணையச் சமநிலை என்றால் என்ன நாம் பயன்படுத்தும் இணையதளங்கள் அனைத்திற்கும் ஒன்றாகவே பணம் கட்டுகிறோம். 100 ரூபாய் பணம் செலுத்தி, இணையம் பயன்படுத்தினால், நாம் அனைத்து இணையதளங்களையும் பார்க்க முடியும். ஒரே வேகத்தில் பயன்படுத்த முடியும். இதுதான் இணையச் சமநிலை. இதற்கு எதிராக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட இருப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன் பிரச்சனை எழுந்தது. ஒருவேளை இணைய சமநிலை மட்டும் இல்லையென்றால், பல பிரச்சனைகள் ஏற்படும். எப்போதும் போல 100 ரூபாய் பணம் செலுத்தி, நம்மால் எல்லா இணையதளங்களையும் பார்க்க முடியாது. சில இணையதளங்களை மட்டுமே இயக்க முடியும். பல இணையதளங்களின் வேகம் பெரிய அளவில் குறையும். ஒவ்வொரு இணையதள செயலுக்கும் தனியாக பணம் கட்ட வேண்டி இருக்கும். இந்த நிலையில் இந்தியாவில் எப்போதும் போல இணைய சமநிலை தொடரும் என்று தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. எந்த ஒரு பெரிய நிறுவனத்தின் பேச்சையும் இதில் கேட்க போவதில்லை என்று தொலைத் தொடர்பு ஆணையம் கூறியுள்ளது. இந்தியாவில் இணைய சமநிலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முகநூல் பெரிய அளவில் முயற்சி எடுத்து தோல்வி அடைத்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் தற்போது இதற்கு எதிராக இணைய சமநிலை சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. சீனாவில் அவர்களுக்கு என்று இணைய விதிகளுக்கு சட்டம் இருக்கிறது. கனடாவில் இந்தியாவை விட அதிக அளவு இணைய சுதந்திரம் நிலவி வருகிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் இணைய சமநிலை முறையாக பேணப்படுகிறது. ஏற்கனவே பலமுறை உலகம் முழுக்க இந்த இணைய சமநிலைக்கு பிரச்சனை உருவாகி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியா முழுக்க இதுகுறித்த விவாதம் எழுந்தது. அதன்பின் முகநூல் நிறுவனம் இந்தியாவில் இணைய சமநிலைக்கு எதிராக செயல்பட முடிவெடுத்து காய் நகர்த்தி பார்த்தது. மொத்த உலகத்தின் வளர்ச்சியையும், சமத்துவத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் இணைய சமநிலைக்கு எதிராக சில அறிவிப்புகள் வெளியாக இருந்தன. ஆனால் இப்போது இந்தியா இணைய சமநிலைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,846.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



