Show all

இந்தியத் தலைமை அமைச்சர் மோடியை கொல்ல திட்டமாம்! புனே காவல்துறை தெரிவிக்கும் தகவல்

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர் ஒன்றில் தலித் பிரிவினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த போர் நினைவு நாள் ஒவ்;;;வொரு ஆண்டும் பீமா கோரேகான் போர் நினைவு நாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 200வது நினைவு ஆண்டு என்பதால் மிகவும் பெரிய அளவில் மக்கள் திரளாக கூடினார்கள். இந்த நினைவு நாள் விழாவில் புகுந்த இந்துத்துவா அமைப்பினர் அங்கு இருந்த தலித் மக்களை தாக்க தொடங்கினர். இது பெரிய கலவரமாக மாறியது. இரண்டு குழுவினரும் மாற்றி மாற்றி தாக்கி கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் தலித் குழுவை சேர்ந்த ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்தப் பிரச்சனை கடந்த 15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 (01.12.2017) அன்று நடந்தது. அதற்கு மறுநாள்தான் இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. 

புனே முழுக்க தலித் குழுக்கள் கலவரம் செய்யத் தொடங்கினர். பின் இது தலித்-இந்துத்துவா கலவரமாக உருவெடுத்தது. புனேயில் இருக்கும் கடைகள், பொது சொத்துக்கள், கார்கள் என எல்லாம் கொளுத்தப்பட்டன. முதல்வர் தொடங்கி காவல்துறை வரை யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியாத அளவிற்கு பிரச்சனை கட்டுக்கடங்காமல் போனது. கலவரம் மும்பைக்கும் பரவியது. மும்பையின் முதன்மைப் பகுதிகள் அனைத்திலும் கலவரம் தீயாக பரவியது. மும்பை- புனே சாலை மூடப்பட்டது. நிறைய பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த கலவரத்தில் எத்தனை பேர் இறந்து இருப்பார்கள் என்று இதுவரை தெளிவான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே மும்பையில் தலித்துகள் அதிகம் தாக்கப்பட்டு வருகிறார்கள். தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் இந்த முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்து இருந்தார். இந்த அடைப்புக்கு மார்க்சிஸ்ட் உட்பட 250 அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதெல்லாம் பழைய நிகழ்வு.

இந்தப் பீமா-கோரேகாவ் கலவரம் வழக்கில் புனே காவல்துறை, டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரானா ஜேக்கப் என்பவரை டெல்லியில் கைது செய்தது.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு புனே காவல்துறை 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரில், தலித் உரிமை ஆர்வலர், பேராசிரியை மற்றும் முன்னாள் தலைமை அமைச்சரின் கிராமப்புற மேம்பாட்டு நிறுவன அதிகாரியாகப் பணிபுரிந்தவரும் அடக்கம்.  இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. 

பொதுநல வாழ்க்கையையும், அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இவர்கள் செயல்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5  பேரும் சிவாஜி நகர் அறங்கூற்றுமன்றத்தில் அணியப் படுத்தப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட அரசு வழக்கறிஞர் உஜ்வாலா பவார் புனே அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்தபோது இந்த விசாரணையில் தெரியவந்த தலையாய விவரங்கள் குறித்து குறிப்பிட்டார்.

ஐந்து பேரின் கைதிற்கு பிறகு அவர்கள் மின்அஞ்சல்களை பரிசோதனை செய்ததில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை போலவே மற்றொரு கொலையை நிகழ்த்தத் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளதாக உஜ்வாலா அறங்கூற்றுமன்றத்தில்; தெரிவித்தார். மோடியின் பெயரை குறிப்பிடாமல் மின்அஞ்சலில் வந்த கடிதத்தில் இருந்ததைப் படித்துக்காட்டினார். இந்தக் கடிதம், தடை செய்யப்பட்ட நடுவண் மாவோயிஸ்ட் குழுவைச் சார்ந்த ஒருவரிடம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளதாம். இதன் மூலம் ராஜிவ் காந்தியை கொலை செய்தது போலவே மோடியையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதியை மோடி ஆட்சி வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலை நீடித்தால் மாவோயிஸ்டுகளுக்கு சிக்கல் ஏற்படும் என்ற காரணத்தால், அவரைக் கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக  புனே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதற்காக மோடி, பொது இடங்களில் மக்களைச் சந்திக்கும் கூட்டங்கள் அல்லது சாலை வழியே ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தி கொல்லத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இணைய ஆர்வலர்களின், இது குறித்த இணையப் பதிவுகள் அனைத்துமே கடுமையாக நையாண்டி செய்து, இந்தத் தகவல் மீதான நம்பிக்கையின்மையை பதிவு செய்திருக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,812. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.