Show all

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பிணை மறுப்பு, மேலும் 15நாள் காவல் நீட்டிப்பு

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசு தில்லாலங்கடியைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்திய போது அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அது சமயம், சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். 

இருந்த போதும் மருத்துவ மனையில் இருந்து அவரை, நெய்வேலியில்  அவர் பேசிய பேச்சுகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தாக கூறி அவர் மீது நெய்வேலி அனல்மின்நிலைய காவல் நிலைய காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

இதற்கிடையே வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்த ஜெகன் சிங் என்பவர் உயிரிழந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விழுப்புரம் அறங்கூற்றுமன்றத்தில் இன்று அணியப் படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 15 நாட்கள் அறங்கூற்றுமன்றக் காவலை நீட்டித்து அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. அறங்கூற்றுவர் லதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,812. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.