28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை மத்தளவில் உள்ள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம், இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்படலாம் என அந்நாட்டின் ஓய்வுபெற்ற விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் சுரேன் ரத்வத்த தெரிவித்துள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது 2009-ம் ஆண்டு அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மத்தளவில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கையின் 2-வது சர்வதேச விமான நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இது இலங்கை தலைநகரான கொழும்புவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது. ரூ.1,300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் என்னும் பெயரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அப்போதையை அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்தில் 3,500 மீட்டர் நீளம், 75 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதை அமைந்துள்ளது. மேலும் 115 அடி உயர கட்டுப்பாட்டு கோபுரமும் உண்டு. இந்த விமான நிலையத்தில் இருந்து சேவைகள் வழங்க தனியார் விமான நிறுவனங்கள் தொடக்கம் முதல் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்த விமான நிலையம் நட்டத்தில் இயங்கி வந்தது. பின்னர் இலங்கை அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்ற பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் நிறுத்தப்படுவதாக இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் அதன் அருகே உள்ள மத்தள விமான நிலையத்தை இந்தியா குத்தகைக்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இலங்கை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்த சுரேன் ரத்வத்த தனது பணி ஓய்வை நேற்று முன்தினம் அறிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மத்தளவில் உள்ள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம், இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்படலாம் எனத் தெரிவித்தார். முன்னதாக கடந்த ஆண்டு மத்தள விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு 40 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்குவதற்கு இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சகம் அந்நாட்டு அமைச்சரவையிடம் அனுமதி கோரியது என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,815.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



